தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கோட்டபாய; என்ன செய்யப்போகிறார் சம்மந்தன்!

0

எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொள்ளவிருப்பதாக மஹிந்தவின் சகோதரரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக நாடாளுமன்றில் வாக்களிக்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்த நிலையில் கோட்டபாய ராஜபக்ச இந்த தகவலை தெரிவித்திருப்பதுடன் கூட்டமைப்பு பிளவு பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிரிழந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஆசி வேண்டி அனுராதபுரம் துாபாராமய விகாரையிலிருந்து ரூவன்வெலிசாய துாபி வரை விசேட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணவர்தன தலைமையிலான முப்படை அதிகாரிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச சமூகத்தின் முன்னால் சென்று ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் உலக ஸ்ரீலங்கா பேரவையின் பிரதிநிதிகள் வியத் மக என்ற சிங்கள தொழில் சார் நிபுணர்களின் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் எலிய என்ற கோட்டபாயவின் மற்றுமொரு அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சிங்கள பௌத்தர்களின் தொன்மை மிக்க புனித ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படும் ருவன்வெலிசாய என்ற துாபியில் நடைபெற்ற விசேட மத வழிபாடுகளை அடுத்து அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள், நாட்டின் தற்போதைய அரசியல் குழப்ப நிலை தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு கோட்டபய பதிலளித்தார்.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கப்போவதில்லையென அறிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கோட்டபய ராஜபக்ச அது தெரிந்தது தானே என்றும் கூறியுள்ளார்.

ரி.என்.ஏ ஆதரவு வழங்கப் போவதில்லையென கூறியிருக்கின்றது. ரி.என்.ஏ. என்பது எப்போதும் எங்களுக்கு எதிராக இருந்தவர்கள் தானோ, ஆனால் இன்று ரி.என்.ஏ. பல துண்டுகளாக பிளவடைந்திருக்கின்றது. ரி.என்.ஏ. இல் இருக்கும் நாட்டை நேசிக்கும் தமிழ் மக்களை நேசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதற்கமைய ரி.என்.ஏ. இல் இருக்கும் ஒரு பகுதியினர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவிருக்கின்றனர்.

புதிய பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜகபச்ச நாடாளுமன்றில் தனக்கு தேவையான பெரும்பான்மை பலத்தை நிருபிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கோடிக்ணக்கான பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கி வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமையவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெரும் தொகை பணம் மற்றும் அமைச்சு பதவிகளை தருவதாக கூறி மஹிந்த மைத்திரி அணி இணைத்துக் கொள்ள சதித்திட்டங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோட்டபாய ராஜபக்ச முற்றாக நிராகரிக்கின்றார்.

அதில் எந்தவித உண்மையும் இல்லை. ஆனால் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் 400 மில்லியன் டொலர் நிதியை ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த செலவிட்டதாக அண்மையில் தெரிவித்துள்ளார். இதற்கமையவே 2015 மஹிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு முன்னர் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கப்பூருக்கு அழைக்கப்பட்டு பெரும் தொகை பணத்துடன் மீளத் திரும்பியிருந்தனர். இவ்வாறு விலைகொடுத்து வாங்கிய காலமொன்று முன்னர் இருந்தது. ஆனால் அப்படி பெரும் தொகை பணத்தை கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்குவதற்கு பணம் கொடுப்பதற்கும் எங்களுக்கு ஒரு நாடும் இல்லை. அவ்வாறு எங்களுடன் இணையவும் ஒரு நாடும் முன்வரவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.