தாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை செய்தனர்!

2

ஈழத்தின் பண்பாட்டு, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது மடுதேவாலயம். இலங்கைத் தீவில் பிரசித்தமான மடு மாதா தேவாலயம். பல்லின மக்களாலும் வணங்கப்படுகின்ற புனித தலம். இந்துக்களாலும் பௌத்தர்களாலும் மிகவும் நம்பிக்கையுடன் வணங்கப்படுகின்றன இந்த தலம் தொடர்ச்சியாக போர் நடவடிக்கைகளுக்கும் இன அழிப்புச் செயல்களுக்கும் முகம் கொடுத்தது என்ற வகையில் இன அழிப்பின் வரலாற்றுச் சாட்சியமாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ் மக்கள் போர்க் காலங்களில் அடைக்கல மாதாவிடம் அடைக்கலம் புகுந்து தம் உயிரை காக்கின்ற நிகழ்வுகள் பல இடம்பெற்றுள்ளன. 1990 ஆம் ஆண்டின் பின்னர் வடக்கில் இலங்கை அரசின் யுத்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து மடுப் பிரதேசம் வரையில் எறியப்பட்டனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மன்னார் எனப் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 1996இற்குப் பிந்தைய இலங்கை அரச படைகளின் போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு மடு தேவாலயத்தில் தஞ்சமடைந்தனர்.

மார்ச் மாதம் 22 ஆம் திகதி 1999 ஆம் ஆண்டு ரணகோச என்ற ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் மன்னார் மடுப் பகுதியை கைப்பற்றும் போரை தொடங்கினர் இலங்கை அரச படைகள். இதற்கு அன்றைய மன்னார் ஆயர் எதிர்ப்பு தெரிவித்தார். புனித தலமான மடு தேவாலயம்மீது போர் தொடுப்பதை நிறுத்துமாறு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தார் ஆயர். அக் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அன்றைய ஜனாதிபதி மடுவை கைப்பற்றும் போரை தொடர்ந்து நடத்தினார்.

பல்லின மக்களையும் காப்பாற்றும் மடுமாதா, சிங்களவர்களும் திருவிழாக் காலங்களில் நிறை நிறையாக வந்து தங்கி வணங்கிச் செல்லும் நம்பிக்கை மாதா, தம்மை காப்பாற்றுவாள் என நினைத்தபடி தமிழ் மக்கள் தஞ்சமடைந்தனர். நவம்பர் 20ஆம் திகதி. 1999ஆம் ஆண்டு. மடு மாதா தேவாலயப் பகுதியை கைப்பற்றும் சண்டையை மூர்க்கமாக மேற்கொண்டனர் இலங்கை அரச படைகள். பாலம்பிட்டி – சின்னப் பண்டிவிரிச்சான் காடுகளின் ஊடாக மடுநோக்கி போர் எடுத்தது இலங்கை இராணுவம்.

இப் போர் நடவடிக்கை காரணமாக பாலம்பிட்டி, தட்சணாமருதமடுப் பகுதி மக்களும் இடம் பெயர்ந்து மடு தேவாலயம் நோக்கி வந்தனர். ஒரு கட்டத்தில் இலங்கை அரச படைகள் மடுதேவாலயத்தை ஆக்கிரமித்தனர். மடுதேவாலயத்தில் மக்கள் தஞ்சமடைந்திருந்ததைக் கண்ட இராணுவத்தினர் அவர்களை அங்கிருக்குமாறே சொல்லினர். மக்கள் அங்கு தஞ்சமடைந்திருப்பதை இராணுவத்தினர் பண்டிவிரிச்சானில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினருக்கு அறிவித்திருக்கக்கூடும். 20க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள்.

துப்பாக்கிப் பிரயோகங்கள். இன்னொரு புறம் எறிகணைகள். மடு ஆலய வளாகத்தில் வசித்த மக்கள் அனைவரையும் ஆலய மண்டபங்களில் தஞ்சமடையுமாறு கூறினர் இராணுவத்தினர். இரவு 9மணியின் பின்னர் பண்டிவிரிச்சான் இராணுவ தளத்திலிருந்து செல்கள் மடுதேவாலயம் நோக்கி வரத் தொடங்கின. இரவு பதினொரு மணி இருண்டு போன அந்த நாளில் பீரங்கிகள் மக்களின் பக்கம் திரும்பின. சனங்கள் என்ன செய்வதென தெரியாது வானத்தை நோக்கி மடுமாதாவே எங்களைப் காப்பாற்றும் என இறைஞ்சியபடி இருந்தனர்

இராணுவத்தின் எறிகணை இருதய ஆண்டவர் ஆலயம்மீது வீழ்ந்து வெடித்தது. ஆலய மண்டபம் குருதி வெள்ளத்தில் நனைந்தது. உயிரை காக்க தஞ்சமடைந்த சனங்கள் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று முப்பத்து ஒருபேர் அவ் இடத்தில் இனக்கொலை செய்யப்பட்டனர். 13 சிறுவர்கள் உள்ளடங்க எல்லாமாக 44பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களின் உடல்கள் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மடுவில் விதைக்கப்பட்டது. தொடர்ந்து தாக்குதல்களை இராணுவத்தினர் விரிவுபடுத்தினர். அன்றிரவு மடு தேவாலயப் பகுதியை முழுமையாக இலங்கை அரச படைகள் கைப்பற்றின.

இச்சம்பவத்த்தில் காயமடைந்த்த தெய்வசேகரம் அமரசிங்கத்தின் இவ் இனப்படுகொலை பற்றிய வாக்குமூலம்.

“அன்றைய தினம் 6.30 மணிக்குப் பின்னர் நாம் இருந்த தேவாளயப்பகுதி எங்கும் சரமாரியான துப்பாக்கிச் சத்தமும் எறிகணைவீச்சுச் சத்தமும் கேட்டவண்ணமிருந்தது. ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் உறங்கச் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தவேளை சரியாக இரவு 9.15 மணியிருக்கும் முதலாவது எறிகணை திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் விழுந்து வெடித்தது. அடுத்த எறிகணை ஆலயத்தின் முன் நின்ற ஆலமரத்தில் விழுந்து வெடித்தது. அதன்பின்னர் கடைசியாக ஏவப்பட்ட எறிகணை நான் இருந்த இடத்திற்கு மேலிருந்த இரும்புக் கம்பியில் வீழ்ந்து வெடித்தது. இதன்போது என்னைச் சுற்றியிருந்த எனது அம்மாவான சந்திரசேகரம் பூமணி, அக்காவான அம்பிகாவதி, இவரின் மூத்தமகனான கஜானன் மற்றும் பெரியப்பாவின் மகன்-மனைவி மற்றும் மகள்-கணவர் உட்பட பல உறவினர்கள் பலியானார்கள். இத்தாக்கதலில் நாற்பது பேர்வரை இறந்தும் ஆறுபதிற்கும் மேற்பட்டவர்கள் வரை காயமடைந்தும் இருந்தார்கள். இந்த எறிகணைத் தாக்குதலின் பின்னர் வேறெந்த வெடிச்சத்தமும் இல்லாமல் ஒரே அமைதியாகக் காணப்பட்டது. எங்கள் மேல் வீசப்பட்ட எறிகணைகள் அனைத்தும் தேவாலயத்திற்கு முன்னாலிருந்த மடு அரச செயலகத்திலிருந்த இராணுவத்தினர் ஏவியதை நான் உட்பட பல மக்கள் கண்டோம். இதிலிருந்து இது ஒரு வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயலாகவே கருதவேண்டியிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் பண்டிவிரிச்சானிலிருந்த ஒரு மதுபானச்சாலையை உடைத்து அங்கிருந்த மதுவை அருந்திய பின்னரே இச்செயலைச் செய்துள்ளனர். இச்சம்பவம் நடைபெற்ற பின்னர் எனது அண்ணாமார், அயலவரின் உதவியுடன் இரவு 1.00 மணியளவில் என்னை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு எடுத்து சென்று இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றி வவுனியா வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அதன்பின்னர் மயக்கமுற்ற நான் இருபத்தைந்து நாட்களுக்குப் பின்னர்தான் பழையபடி எனது சுயநினைவைப் பெற்றேன்.”
(நன்றி- இணையதளம்)

இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரம்

01. சூரியகுமார் சுகந்தன் – விவசாயம் 22
02. சூரியகுமார் சுகந்தி – வீட்டுப்பணி 23
03. இந்திரமோகன் தட்சாயினி – மாணவி 13
04. நிக்கலஸ்யூட் யாழினி; – ஆசிரியை 25
05. நவரட்ணம் இராசேஸ்வரி – வீட்டுப்பணி 58
06. கனகரத்தினம் வாரித்தம்பி – கமம் 54
07. காளிதாசன் செல்வகுமாரி – வீ.பணி 22
08. கிரேசு செல்வராஜா – விவசாயம் 39
09. கருணைராசா கபாஸ்கர் – மாணவன் 15
10. கருணைராசா தெய்வானை – வீட்டுப்பணி 49
11. குணவீரசிங்கம் யோகேஸ்வரி – வீ.பணி 22
12. குணவீரசிங்கம் லோகேஸ்வரி – மாணவி 10
13. குணவீரசிங்கம் சுகன்யா – 9
14. குணவீரசிங்கம் சுவேனியா – மாணவி 20
15. தர்மலிங்கம் தர்மநீதன் – மாணவன் 10
16. தர்மலிங்கம் சாந்தகீதன் – குழந்தை 4
17. தம்பாப்பிள்ளை திசவீரசிங்கம் – விவசாயம் 46
18. திசைவீரசிங்கம் மதிராஜ் – குழந்தை 3
19. திசைவீரசிங்கம் அம்பிகாவதி – வீட்டுப்பணி 37
20. முனியாண்டி உதயகுமார் – விவசாயம் 22
21. முனியாண்டி செல்வம் – வீ.பணி 55
22. முத்தையா சிவானந்தம் – கமம் 26
23. ஜெயராம் ஜெயசீலன்; – மாணவன் 18
24. செல்வராசா நிறாஜ் – மாணவன் 9
25. செல்வராசா ரதன் – மாணவன் 12
26. வேலுப்பிள்ளை தர்மலிங்கம் – 44
27. ந்திரமோகன் பபிதரன் – மாணவன் 6
28. சந்திரமோகன் சுஜிதரன் – மாணவன் 9
29. சந்திரமோகன் சுதாகரன் – மாணவன் 9
30. சந்திரசேகரம் பூமணி – வீ.பணி 61
31. சதாசிவம் ஜமுனன் – 21
32. சிவானந்தம் சுகந்தினி – வீ.பணி 22
33. சிறிபாஸ்கரன் மைந்தினி – குழந்தை 3
34. வாரித்தம்பி பவானி – மாணவி 17
35. ஏகாம்பரம் ராமேஸ்வரி – வீ.பணி 52

காயமடைந்தவர்களின் விபரம்

01. சூரியகுமார் செல்வராணி – வீட்டுப்பணி 43
02. இளையதம்பி உருக்குமணி
03. இராமசாமி கேதீஸ்வரன் – 24
04. இராமலிங்கம் இந்திராணி – 17
05. இராமலிங்கம் தனலட்சுமி – 52
06. இரத்தினம் நவரத்தினராசா – 46
07. இரத்தினம் தனேஸ்வரன் – 29
08. இரத்தினம் விஜயலட்சுமி – 17
09. இரத்தினம் ரங்கம்மா – 55
10. ஈஸ்வரி – –
11. உதயசீலன் – –
12. நிஷாந்தன் – –
13. நவரத்தினராசா துஸ்யந்தினி குழந்தை 3
14. நவரத்தினராசா தயாளினி குழந்தை 4
15. நவரத்தினராசா மனோரஞ்சிதம் – 43
16. நவரத்தினராசா அகதீஸ்வரி – 19
17. நவரத்தினராசா சந்திரகாந்தன் மாணவன் 11
18. கஜன் குழந்தை 3
19. கனகரட்ணம் குமுதினி மாணவி 13
20. கந்தசாமி – –
21. கார்த்திக் குமரன் – –
22. கார்த்திக் சத்தியா – –
23. கார்த்திக் சிவபாதமலர் – –
24. கதிரவேலு சூரியகுமார் – –
25. குமாரசாமி கேதீஸ்வரன் கமம் 26
26. கிற்ஸ்ரி ரஞ்சினி வீட்டுப்பணி 37
27. பூபாலசிங்கம் முகிலன் மாணவன் 9
28. பூபாலசிங்கம் முத்துப்பிள்ளை வீட்டுப்பணி 40
29. பாலசுந்தரம் – –
30. பவித்திரா – –
31. பரமேஸ்வரி – –
32. தயாநிதி மாணவி 10
33. தனுசன் – –
34. தர்மலிங்கம் உதயகீதா மாணவி 11
35. தர்மலிங்கம் குமுதகீதன் மாணவன் 6
36. தர்மலிங்கம் கமலாதேவி – 33
37. திருக்குமரன் – –
38. மல்லிகாதேவி – 34
39. அம்பிகா – –
40. அழகன் செல்வம் – 43
41. ஜோன் திவாகரன் மாணவன் 13
42. யோகராசா நாகேந்திரன் – –
43. யோகராசா பகீரதன் – –
44. கோகுலசாரதி – 59
45. கேதீஸ்வரன் டினோசன் குழந்தை 3
46. கேதீஸ்வரன் ஜெயந்திமலர் – 29
47. பெருமாள் ரவி – –
48. மோகன் பஜாணன் மாணவன் 9
49. செல்வன் கஜன் குழந்தை 4
50. செல்லத்துரை சிவராசா கமம் 38
51. செல்லத்துரை ராதாகிருஸ்ணன் – 36
52. சுஜி – –
53. சந்திரசேகரம் அமரசிங்கம் – 35
54. சுகந்தினி – –
55. சத்தியவாணி – –
56. சதானந்தம் – –
57. சறோஜினி – 32
58. சிந்துஜா – –
59. சிவபாதசுந்தரம் கமலநாயகி வீட்டுப்பணி 38
60. சிவமலர் – 28
61. சிவசக்தி – –
62. சிவராசா மல்லிகாதேவி வீட்டுப்பணி 35
63. சிவராசா வரம்சவல்லி மாணவன் 10
64. சிறிபாஸ்கரன் கௌசல்யா – –
65. சிறிபாஸ்கரன் சயந்தா – –
66. சிறிபாஸ்கரன் சங்கீதா – –
67. சிறிபாஸ்கரன் – 29
68. சிறிபாலசுந்தரம் – 50
69. சிறிதரன் – –
70. வள்ளுவன் – –
71. ரவி – –
72. எஸ்.சதானந்தன் மாணவன் 13
73. ஏகாம்பரம் சிவராஜ் – –
74. எப்.உதயசுதா மாணவி 12
(நன்றி- இணையதளம்)

தமிழீழ விடுதலைப் புலிகள் மடுப் பிரதேசத்தை மக்களின் நம்பிக்கையின் பொருட்டு போர் தவிர்ப்பு வலயமாகவும் புனித பிரதேசமாகவும் கையாண்டனர். புலிகளற்ற மடு தேவாலயத்தில் நிராயுத பாணியாக தனித்திருந்த மக்களையே இராணுவத்தின் படுகொலை செய்தனர். ஒருவேளை அங்கு விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் தம் உறவுகள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். போர் தவிர்ப்பு வலயமாக நடைமுறைப்படுத்தி, விடுதலைப் புலிகள் தமது நடமாட்டத்தை தவிர்த்த தேவாலயப் பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் பெரும் இராணுவ வெற்றியாக அதை சித்திரித்தனர்.

அத்துடன் மடு தேவாலய கைப்பற்றல் வெற்றியை நினைவுபடுத்தும் முகமாக மடு தேவலாயப் படத்தை பின்னணியாக கொண்ட தன்னுடைய புகைப்படங்களை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தலில் பயன்படுத்தினார். மடு தேவாலயம் சிங்களவர்களாலும் வணங்கப்படும் தலம் என்பதால் அதனை ஒரு போர் வெற்றியாக காட்டி சிங்கள மக்களை கவர்ந்து போர் வெற்றி சூடிய அரசியாக தன்னை அடையாளப்படுத்த முயன்றார் சந்திரிக்கா. தமிழ் மக்களை இனப் படுகொலை செய்து அந்த இடத்தை கைப்பற்றும் அவ் இராணுவ நடவடிக்கையின் மூலம் இருநாட்டுப் போர் மனநிலையில் அவர் இருந்தார்.

தாமும் வணங்கும் தேவாலயத்தில் வைத்தும் எம்மை இனக்கொலை செய்தனர். மடு மாதா பார்த்துக் கொண்டிருக்கவே எம் மக்களை அவர்கள் படுகொலை செய்தனர். மடு மாதாவின் முகத்தில் எங்கள் சனங்களின் குருதி பட்டுத் தெரித்தது. மாதாவின் சந்நிதானம் மனித சதைப் பிண்டங்களால் நிறைந்து கிடந்தது. மடு மாதாவே இந்த இனப்படுகொலையின் சாட்சி. எங்கள் மக்களை இன அழிப்பு வெறியோடு கொன்று வீசிய இலங்கை அரச படைகளின் அராஜகச் செயலுக்கு எங்கள் மாதாவே வரலாற்றுச் சாட்சியாக இருக்கிறார்.

400க்கு மேற்பட்ட வருடங்கள் பழமை கொண்ட மடு மாதா ஆலயம் மத ஒடுக்குமுறைகளின் தஞ்சமடைந்த கிறீஸ்தவ மக்களின் அடையாளம் ஆகும். வன்முறையை வெறுக்கும் குருதி சிந்துதலை எதிர்க்கும் இந்த ஆலயத்தில் தமிழர்கள் குருதி சிந்த வைக்கப்பட்டனர். இந்த ஆலயத்தின்மீது வன்முறை மேற்கொள்ளப்பட்டது. உலகறியப்பட்ட இந்த ஆலயத்தின்மீது தாக்குதலை நடாத்தி தமிழ் மக்களை கொலை செய்து அவர்களின் குருதியால் ஆலயம் நனைவதைக் குறித்து அன்றைய அரசு வருத்தமோ, அச்சமோ அடையவில்லை என்றால் அது மனித உரிமைகள்மீதும் மனித குலத்தின்மீது எத்தகையை பார்வையை கொண்டிருக்கிறது என்பது புரியும்.

இலங்கை அரச படைகள் தெய்வங்களையும் படுகொலை செய்பவர்கள். ஆலயங்களையும் அழிப்பவர்கள். வைச, கிறீஸ்தவ, இஸ்லாமிய ஆலயங்களை அழிப்பதும் அங்கு தஞ்சமடைந்த மக்களை கொன்றழிப்பதும் வடகிழக்கில் பல இடங்களில் நடந்தேறிய சம்பவம். நவாலி தேவாலயம், புதின பேதுருவானவர் ஆலயம் முதலியவற்றில் இனப்படுஅகொலைகளை அரங்கேற்றிய இலங்கை அரச படைகள் சிங்கள மக்களாலும் வணங்கப்படுகின்றன மடுதேவாலயத்திலும் வைத்து தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துள்ளனர்.

எங்கும் எப்படியும் ஈழத் தமிழ் மக்களை கொலை செய்யும் இலங்கை அரசின், அதன் படைகளின் மரபணுவில் உறைந்த இனப்படுகொலை வெறி களையப்படவேண்டியவை. வரலாற்று ரீதியாக மன்னிப்புக் கோரவும் நீதியை வழங்கவும் வேண்டியவை. இதுவே ஈழத் தமிழர்களின் பாதுாப்பாற்கும் மனித குலத்திற்கும் உலக ஒழுக்கத்திற்கும் அவசியமானது. இவையாவற்றையும் போர் வெற்றியாக மூடி மறைக்கும் அரச மனோபாவமானது இன அழிப்பு சார்ந்த நோயை குருதியில் வைத்தபடி அதனைப் புதுப்பிக்க மறுக்கும் போக்காகும்.

தீபச்செல்வன் – குளோபல் தமிழ் செய்திகள்

2 Comments
  1. arun says

    ஈழத்தின் பண்பாட்டுக்கும் மடு சோ்ச்சுக்கும் தொடா்புகள் இல்லை
    தமிழா் பண்பாடு சைவத்திற்குள் அடங்கும் கிறிஸ்தவத்திற்குள் அல்ல கிறிஸ்தவம் அரேபிய யூத ஆபிரகாமியத்தின் அடையாளத்திற்குள் அடங்கும் சைவத்தன் அடையாளங்கள் தமிழ்தேசியத்தின் அடையாளம்

  2. npNkuqvhgqsAxe https://www.google.com/ says

Leave A Reply

Your email address will not be published.