தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் பிரதேச அபிவிருத்தி (கிழக்கு மாகாண அபிவிருத்தி) பிரதியமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேலும் சில அமைச்சுப் பதவிகள் சற்றுமுன்னர் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
அதன்படி எஸ்.பி. நாவின்ன கலாச்சார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் டிவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது “நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்” என கருணா தனது டுவிட்டர் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
குறித்த செய்தியை “மகிழ்ச்சியான செய்தி” எனக் கூறி ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களே பிரதமர் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை காட்டுவதற்கு மஹிந்த தரப்பும், ரணில் தரப்பும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மையும், மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க உள்ளதாக கருணா கூறியுள்ளமை அனைவர் மத்தியிலும் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.