மஹிந்த குடும்பத்திற்கு ஆப்பு வைக்கும் நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து!

0

ஸ்ரீ லங்கா சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவுக்கு, வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு இரத்துச் செய்துள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் இதனை இன்று தெரிவித்துள்ளது.

முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த, ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்கள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான நிசாந்த சில்வா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்றைய தினம் இதற்கான அறிவித்தலை வெளியிட்டதை அடுத்து, இந்த விடயம் அரசியல் மற்றும், மனித உரிமை அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட ஊடகவியலாளர் படுகொலைகள், கீத் நொயார், உபாலி தென்னக்கோன், நாமல் பெரேரா உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீதுான தாக்குதல்கள், கொழும்பில் 11 இளைஞர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான அவன்ட் கார்ட் வழக்கு, ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ள வசீம் தாஜூதீன் கொலை வழக்கு உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளில் விசாரணை அதிகாரியாக நிசாந்த சில்வா செயற்பட்டிருந்தார்.

அத்துடன், புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை குறித்தும் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுத்த நிசாந்த சில்வா குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், இவரின் இடமாற்றத்துக்கு பின்னால் பாரிய அரசியல் சதி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதுடன், இவரது இடமாற்றம், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கால குற்றங்கள் குறித்த விசாரணைகளை நிறுத்தும் நோக்கம் கொண்டது என்று நம்பப்படுகிறது.

இந்த இடமாற்றம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம், விசாரணைகளை நிறுத்தும் நோக்கிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று கவலை வெளியிட்டுள்ளதுடன், இதற்கும் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கும் தொடர்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், நிசாந்த சில்வாவிடம் கையளிக்கப்பட்ட விசாரணைகளை நிறுத்தும் நோக்கிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்குப் பின்னால் பாரிய அரசியல் நோக்கம் இருப்பதாகவும், அந்த அமைப்பின் அமைப்பாளர் ஜே.சி.வெலியமுன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டது, மற்றும் காணாமல் ஆக்கப்பட்டது உள்ளிட்ட மனித உரிமை மீறல் வழக்குகளை விசாரித்த நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டமை, இந்த விசாரணைகளில் அரசாங்கத்தின் தலையீட்டை காட்டுவதாக அனைத்துலக மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டிருந்தது.

அத்துடன் இந்த வழக்கு விசாரணைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், நிசாந்த சில்வாவின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், நேற்றைய தினம் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததுடன், உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் என்பன ஊடக அறிக்கைகளை வெளியிட்டு இந்த விடயத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.