மாவீரர் தினத்தை ஒழுங்கமைத்தவர் வீட்டின் மீது தாக்குதல் ! இராணுவ புலனாய்வாளர்களின் அடாவடி

0

வடதமிழீழம், பருத்தித்துறை சுப்பர்மடத்தில் நேற்று மாவீரர்தினத்தை ஒழுங்கமைத்து, படைத்தரப்பின் அச்சுறுத்தலையும் கணக்கிலெடுக்காமல் அஞ்சலி நிகழ்வை நடத்தியவரது வீடு நள்ளிரவில் தாக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு அவரது வீட்டுக்கு சென்ற இனம்தெரியாத நபர்கள், வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு சென்றுள்ளனர்.

நேற்று (27) பருத்தித்துறை சுப்பர்மடத்தில் பொதுமக்களால் மாவீரர்தின நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. இதையறிந்த பருத்தித்துறை பொலிசார் அங்கு சென்று துப்பாக்கிமுனையில் மக்களை விரட்டியடித்தனர். இராணுவ புலனாய்வாளர்களும் ஆயுதங்களுடன் சென்றிருந்தனர்.

மாவீரர்தினத்திற்காக கட்டப்பட்டிருந்த கொடிகளை அறுத்தெறிந்து, பொருட்களை அடித்துடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர். எனினும், அச்சுறுத்தலிற்கு அடிபணியாமல் மக்கள் அஞ்சலி நிகழ்வை நடத்தினர். அப்போது பொலிசார், புலனாய்வாளர்கள் அங்கு குவிந்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அவரது வீடு தாக்கி சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்கள் காரணமாக, நேற்றிரவு அவர் வீட்டில் தங்கியிருக்கவில்லை.

முன்னதாக நேற்று முன்தினம் (26)ம் திகதி வாள்களுடன் இவரது வீட்டுக்கு சென்ற சிலர், தம்மை குற்றப்புலனாய்வு பிரிவினர் என அடையாளப்படுத்தி, மாவீரர்தினத்தை அனுட்டிக்க கூடாதென எச்சரித்திருந்தனர்.

கடந்த ஒக்ரோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார். இதன்பின்னர், இம்முறை அஞ்சலி நிகழ்வுகளிற்கு தடங்கல் ஏற்படுத்த படைத்தரப்பு முயன்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கள அரச கக்ககூலிகளுக்கு புதிய அரசாங்கத்தில் பொறுப்புகள் கிடைத்திருக்கும் இவ்வேளை தங்கள் எஜமான் விசுவாசத்தை காட்டுவதற்கு மக்களின் எழுச்சியை தடுக்க எத்தனித்தமை மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.