மாவீரர் நாள் நிகழ்விற்கு எதிராக தடையுத்தரவு கோரும் கோப்பாய் பொலிஸார்!

0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்குத் தடை உத்தரவை வழங்குமாறு கோப்பாய் பொலிஸார் மனு நகர்த்தல் பத்திரத்தினைத் தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், நீதிமன்றின் இந்தக் கட்டளையை நடைமுறைப்படுத்தும் வகையில் வீரசிங்கம் சிறீதரன் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு எதிரான எழுத்துமூல தடை உத்தரவை வழங்குமாறு கோப்பாய் பொலிஸார், தமது மனு மீது நகர்த்தல் பத்திரம் மூலம் கோரியுள்ளனர்.

வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் சின்னங்கள், கொடிகள் மற்றும் வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டு நிகழ்வு நடத்தப்படவுள்ளதாக பொலிஸாரின் புலன் விசாரணையின் அடிப்படையில் அறியப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காணியில், பயங்கரவாத தடைச் சட்டத்தில் ஒழுங்குமுறைகள் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், சின்னங்கள் மற்றும் வரை படங்களைப் பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்படுவதாக யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் கடந்த வெள்ளிக்கிழமை கட்டளையை வழங்கியிருந்தார்.

எனினும் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடைவிதிக்கப்படுவதாக நீதிமன்றால் எந்த தடையுத்தரவும் வழங்கப்படவில்லை. இந்நிலையிலேயே எழுத்து மூல தடையுத்தரவை நீதிமன்றில் பொலிஸார் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.