மீண்டும் இலங்கை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு ! தெரிவுக்குழு நியமிப்பு

0

தெரிவுக்குழு நியமனத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.அதன்படி, அடுத்த நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு கூட்டப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.நாடாளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. இதன்போது தெரிவுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து சபாநாயகர் அறிவித்தார்.

அதன்படி, ஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தலா 1 உறுப்பினருமாக தெரிவுக் குழுவில் இடம்பெறுவர் என சபாநாயகர் அறிவித்தார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு 7 பேரின் பெயர் சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஐவர் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்ட நிலையில், அது தொடர்பில் சர்ச்சை கிளம்பியது. அதனை தொடர்ந்து ஆளுந்தரப்பு சபையிலிருந்து வெளியேறியது.

அதனை தொடர்ந்து ஐ.தே.க.-யின் கோரிக்கைக்கு அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 121 பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவுக்குழு நியமனம் நிறைவேற்றப்பட்டது.இதனையடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.இதனை அடுத்து நவம்பர் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வௌியிட்டிருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றத்தினால் நவம்பர் 13 ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து நாடாளுமன்றம் 14, 15, 16 ஆகிய திகதிகளில் கூடிய போதிலும் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பல்வேறு குழப்ப நிலைகளை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் கடந்த 19 ஆம் திகதி நான்காவது முறையாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நாடாளுமன்றம் கூடியது.

ஆனால், நாடாளுமன்றம் கூடிய சிறிது நேரத்திலேயே சபை நடவடிக்கைகள் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.