முடிந்தால் செய்யுங்கள்! மைத்ரிக்கு பகிரங்கமாக சவால் விடுத்த மனோ

0

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் சூளுரைத்தது போல், முடிந்தால் ரணில் விக்கிரமசிங்கவுடனான கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியின் சம்பவங்களை அம்பலப்படுத்துங்கள் என்று ஐக்கிய தேசி முன்னணியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் சவால் விடுத்துள்ளார்.

அதேவேளை ஒக்டோபர் 26 ஆம் திகதி தான் ஆரம்பித்த ஆட்டத்தை எந்த சவால்கள் வந்தாலும் கைவிடப்போவதில்லை என்றும் மைத்ரிபால சிறிசேன கூறியிருந்த நிலையில், அதனையும் சவாலுக்கு உட்படுத்திய மனோ கணேசன், முடிந்தால் ஆட்டத்தை தொடருங்கள் அதற்கு விரைவில் முடிவுகட்டி வீட்டிற்கு விரட்டியடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன – மஹிந்த ராஜபக்சவுடன் கூட்டணி இணைந்து அமைத்துள்ள கூட்டணியால் நாட்டின் அரசியல் சாசனமும், ஜனநாயகமும் முழுமையாக மீறிவருவதாக குற்றம்சாட்டிவரும் ஐக்கிய தேசிய முன்னணி, அதற்கு எதிராக மக்களையும் இணைத்து முன்னெடுத்துள்ள கண்டனக் கூட்டங்களின் தொடர்ச்சியாக இன்றைய தினம் கண்டியில் கூட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி புத்தகமொன்றை எழுதப்போகின்றாராம். அந்தப் புத்தகத்தில் உள்ளடக்கப்படவுள்ள விடையங்களை பட்டியலிட்டு மக்களிடம் சென்று கூறுவராம். அதாவது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அம்பலப்படுத்துவாராம்.

முடிந்தால் மக்களிடம் சென்று கூறுங்கள் என்று மைத்ரிபாலவிடம் சவால்விடுகின்றோம்.அதேவேளை நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிராக சென்று 2020 ஆம் ஆண்டு வரை பொதுத் தேர்தலை நடத்த முடியாது என்பதால், முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லுங்கள் என்று மைத்ரிக்கு சவால் விடுக்கின்றோம். அப்போது நாங்கள் உங்களுக்கான பதிலை கொடுப்போம்.ஆனால் எந்தவொரு தேர்தலும் எமது அரசாங்கத்தின் கீழ் மாத்திரமே நடத்துவோம்.

நாட்டின் அதி உயர் சட்டபீடமான நாடாளுமன்றில் பலவந்தமாக ஆட்சியை கைப்பற்றி வைத்துக் கொண்டுள்ள மஹிந்த – மைத்ரி கூட்டம் எவ்வாறு நடந்து கொண்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு பார்த்தார்கள்.இவ்வாறான நிலையில் இவர்களது ஆட்சியின் கீழ் எவ்வாறு சுதந்திரமான தேர்தலொன்று நடைபெறப்போகின்றது. இராணுவத்தையும், பொலிசாரையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தேர்தலை பலாத்காரமாக கைப்பற்றவே இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதனையே நாம் தோற்கடிக்க வேண்டும் என்று போரடிவருகின்றோம்.அதேவேளை விரைவில் மஹிந்தவின் சட்டவிரோதமான அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளோம். மஹிந்தவாதிகளை போல், நாடாளுமன்றத்திற்குள் மிளகாய் தூள் தாக்குதல் நடத்தி, வன்முறைகளை கட்டவிழ்ததுவிட்டது போல் நாம் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடத் தயாரில்லை.

அதனை ஒருபோதும் செய்யவும் மாட்டோம். நாம் ஜனநாயக முறைப்படி அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இந்த சட்டவிரோத அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அதேபோல் மக்களுடன் இணைந்து வீதிப் போராட்டங்களை தீவிரப்படுத்தி சட்டவிரோதக் கூட்டணியை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

இதற்கமைய விரைவில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி, நல்லாட்சியை நிலைநாட்டி ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் உட்பட்டு தேர்தல்களை நடத்தி மக்கள் விரும்பும் ஆட்சியாளர்களை தெரிவுசெய்வதற்கான வசதிகளை செய்து கொடுப்போம்” என்று மனோ கணேசன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.