ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் நவம்பர் 14-ம் திகதி மீண்டும் கூட்டப்படவுள்ளது, இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நவம்பர் 4-ம் திகதியான இன்றையதினம் இரவு வெளிடப்பட்டிருக்கின்றது.
ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால ஸ்ரீசேனாவினால் ஒக்ரோபர் 26-ம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில்விக்கிரமசிங்க நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருந்தார், இதனையடுத்து நாடாளுமன்றில் தனக்கே பெரும்பான்மை பலம் இருப்பதாக ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததுடன் மஹிந்த ராஜபக்சவின் நியமனத்தை ஏற்க மறுத்தார்.
இதனால் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் ஒக்ரோபர் 27-ம் திகதி சனிக்கிழமை நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 16-ம் திகதி ஒத்திவைப்பதாக உத்தரவிட்டு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனா அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார்.
மைத்திரியின் இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரப்பினர் கடும் கண்டனத்தையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்து வரும் நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிக்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஸ்ரீலங்கா அரச தலைவர் தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய ஸ்ரீலங்கா அரச தலைவரின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்தனவினால் இன்று இரவு வெளிப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் நவம்பர் 14-ம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கடும் அழுத்தங்களை பிரயோகித்து வந்தாலும் இந்த வாரம் நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லையென்பதை ஐபிசி தமிழ் இன்றைய தினம் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் வரும் 14-ம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.