வெள்ளை வான்காரர்களை காப்பாற்றுவதால் நிச்சயம் தோல்வியடைவீர்கள்! மைத்திரிக்கு லசந்தவின் மகள்

0

எனது தந்தைக்கும் பாதிக்கப்பட்ட ஏனையவர்களிற்கும் நீதி கிடைப்பதை தடுக்க முயன்று அதற்கு குறுக்கே நின்றீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் தோல்வியடைவீர்கள் என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதிய கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

முப்படைகளின் பிரதானியையும் வெள்ளை வான் மூலம் மரணத்தை ஏற்படுத்துபவர்களையும் பாதுகாப்பதற்காக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என்றும் அக் கடித்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லசந்த விக்ரமதுங்க படுகொலை உட்பட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை விசாரணை செய்து வந்த சி.ஐ.டி. அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெள்ளை வான் மரணத்தின் மூலம் ஆட்சிபுரிபவர்களை பாதுகாப்பதற்காகவோ நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என லசந்த விக்ரமதுங்கவின் மகள் ஜனாதிபதிக்கு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டார்களா என்பது எனக்கும் தெரியாது. உங்களிற்கும் தெரியாது, நீங்கள் இடமாற்றுவதற்கு முன்னர் நிசாந்த சில்வா மேற்கொண்ட ஓய்வற்ற குற்றவியல் விசாரணைகளின் அடிப்படையில் இதனை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்னை பொறுத்தவரை ஒரு சாட்சி என்ற அடிப்படையில் கேள்விகளிற்கு உண்மையான முழுமையான பதிலை வழங்குவது முக்கியமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசத்தின் தலைவர் என்ற அடிப்படையில் உங்களை பொறுத்தவரை தனிப்பட்ட உறவுகள், அரசியல் தேவைகள், உங்கள் மனவிருப்பங்களைவிட சட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது முக்கியமானது என குறிப்பிட்டுள்ள அகிம்சா, உங்களை பொறுத்தவரை விசாரணையாளர்களிற்கு தேவையான வளங்களை வழங்குவதும் அரசாங்கத்தின் ஆதரவை வழங்குவதுமே முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

இவற்றிற்கு அப்பால் நிசாந்த சில்வா போன்று அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதன் மூலம் உரிய மரியாதை கிடைக்கும், தண்டனை கிடைக்காது என்பதை நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு தெளிவுபடுத்துவது உங்கள் பணியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு இலங்கையின் குற்றவியல் விசாரணை பிரிவினர் மற்றும் சுயாதீன அமைப்புகளான தேசிய பொலிஸ் ஆணைக்குழு, அரசமைப்பு பேரவை மீது முழு நம்பிக்கையுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் உங்களை வெளிப்படையான அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட அனுமதிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

image.png

Leave A Reply

Your email address will not be published.