ஸ்ரீலங்காவின் அரசியல் குழப்பம்! இணக்கப்பாடு இன்றி முடிவடைந்த மஹிந்த, மைத்திரி மற்றும் ரணில் கூட்டம்

0

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு தீர்வை காணும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டம் இணக்கப்பாடுகள் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மை உள்ளதாக ரணில் தரப்பினரும் நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மஹிந்த தரப்பினரும் பரஸ்பரம் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்ற அமர்வுகளை அமைதியான முறையில் முன்னெடுத்து செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சர்வ கட்சி சந்திப்பொன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பமான இந்த சந்திப்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நல்லாட்சி அரசாங்க அமைச்சரான லக்ஷ்மன் கிரியெல்ல, தமது தரப்புக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பதை இதன்போது எடுத்துக் கூறியதாக குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க மக்கள் ஆணை வழங்கவில்லை எனக் குறிப்பிட்ட லக்ஷ்மன் கிரியலெ்லஇ புதிய பிரதமர் நியமிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டார்.

நாளைய தினம் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் வருகைதந்து அதனை நிரூபித்துக் காட்டுவதாக ஜனாதிபதியிடம் தமது தரப்பு கூறியதாக மற்றுமொரு ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.

எனினும் இந்த விடயத்தை தாம் தெரிவிக்கும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முகம் வெறிச் சோடிக் காணப்பட்டதாகவும் அஜித் பீ பெரேரா மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து அது தொடர்பில் விவாதித்து, வாக்கெடுப்பை நடத்த முடியும் என தாம் கூறியதாக ஆளும் தரப்பு அமைச்சரான விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

அந்த நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அதனை ஏற்பதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் வலுக்கட்டாயமாக சபாநாயகர் தமக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்ய முயற்சிப்பார் ஆயின் அதனை ஒருபோதும் ஏற்க தயாரில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் கருத்துக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே தலைமை வகித்ததாக ஆளும் தரப்பைச் சேர்ந்த விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.

அத்துடன் தமக்குள்ள பெரும்பான்மையை நேரடியாக நிரூபிப்பதாக அஜித் பீ பெரேரா கூறியமை குறித்து பதில் அளித்த விமல் வீரவன்ச, அதற்கான நேரத்தை ஜனாதிபதி வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்

இணைப்பு 01

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மூல காரணமான மூவரும் ஒன்றாக சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நல்லாட்சி அரசாங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேனவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வ கட்சி குழுக் கூட்டத்திலேயே இவர்கள் சந்தித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சர்வ கட்சி குழுவின் சந்திப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் புறக்கணித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரினது அமைச்சரவைக்கு பெரும்பான்மை இல்லை என நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினது தலைவர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் இன்று நடைபெற்ற சர்வ கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பு என்ற அடிப்படையில் ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் சபாநாயகர் பங்கேற்க மாட்டார் என சபாநாயகரின் அலுவலகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேவேளை சபாநாயகரைப் பின்பற்றி, மக்கள் விடுதலை முன்னணியும் இந்த சந்திப்பிரல் கலந்துக் கொள்ளாது என ஜே.வி.பி இன் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பாளி என மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே ஜனாதிபதியே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தீர்க்க வேண்டியவர் என்ற அடிப்படையில் அவருடன் கலந்துரையாடுவதற்கு எதுவும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.