இலங்கை மீது பிரித்தானியா கழுகுப் பார்வை! ஓடவும், ஒழியவும் முடியாது தவிக்கும் மைத்திரி!

0

ஸ்ரீலங்காவின் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள பிரித்தானியா, மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி ஆகியன பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகத்தின் மனித உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய, 30 நாடுகள் தொடர்பிலான 2018ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் நிலைமைகள் குறித்த, இடைக்கால அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய மனித உரிமைகளுக்கான இராஜாங்க அமைச்சர் அஹமட், பிரித்தானிய அரசாங்கத்திற்கு இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதோடு, அறிக்கையின் முழுமையான பிரதி, பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர் இணையத்தளத்திலும் வெளியாகியுள்ளது.

ஏழு உப தலைப்புகளுடன் வெளியாகியுள்ள இந்த அறிக்கையில், ‘மனித உரிமைகளின் பாதுகாவலர்கள்” என்ற உபதலைப்பில் ஸ்ரீலங்கா தொடர்பிலான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

“ஸ்ரீலங்காவின் நிலைமைகளை பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது. மனித உரிமைகள் பாதுகாவலர்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பலரது அக்கறையையும் நாம் அறிவோம்.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மனித உரிமைகள், சட்டவாட்சி, நல்லாட்சி என்பன பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் நாம் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் பேசியுள்ளோம்.” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“சிவில் சமூக பிரதிநிதிகளுடனும், அனைத்து சர்வதேச பங்காளிகளுடனும், நாம் நெருக்கமான தொடர்பில் இருக்கின்றோம். தேவை ஏற்பட்டால், சூழ்நிலைக்கு ஏற்ப பதிலளிக்கவும் நாம் தயாராக இருக்கின்றோம்.” எனவும் பிரித்தானிய மனித உரிமைகளுக்கான இராஜாங்க அமைச்சர் அஹமட், சமர்ப்பித்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.