எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் தற்பொழுதும் இரா.சம்பந்தனின் கட்டுப்பாட்டில்!

0

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான இழுபறிக்கு இதுவரையில் முடிவு எட்டப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் தற்பொழுதும், இரா.சம்பந்தனின் பொறுப்பிலேயே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் சபாநாயகர் தமது முடிவை அறிவிக்காததால், இரா.சம்பந்தன், குறித்த செயலகத்தை இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அறிவிப்பை வெளியிடாமல், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.

இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகியன எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து, நேற்று முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருந்தார்.

எனினும், நேற்றைய அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான தமது முடிவை சபாநாயகர் அறிவிக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, ”இதுகுறித்து ஆராய தெரிவுக்குழு ஒன்றை அமைக்கும் யோசனை அடங்கிய பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீரவும் கடிதம் ஒன்று தந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் எனக்கு மேலதிக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இவற்றையெல்லாம் ஆராய்ந்து விட்டு, எனது நிலைப்பாட்டை கூடிய விரைவில் சபையில் அறிவிப்பேன்” என தெரிவித்திருந்தார்.

சபாநாயகர் இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

அத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இரா.சம்பந்தன் கௌரவமான முறையில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க நேற்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவினால், பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடமான அலரி மாளிகைக்கு செல்ல முடியவில்லை.

ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்து வெளியேறாததால், அலரி மாளிகைக்குச் செல்ல முடியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.