எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கலாம்: இனி எம்மை வெல்ல யாருமில்லை – ஸ்டாலின் சூளுரை

0

மத்தியிலும், மாநிலத்திலும் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கலாம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 14 ஆம் திகதி தி.மு.க.வில் இணைந்துகொண்டார்.

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) மாலை கரூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் “மக்கள் கூட்டத்தைக் காணும்போது நம்மை வெல்ல யாரும் இல்லை, எவரும் பிறக்கப்போவதும் இல்லை என்ற உணர்வோடு பார்க்கிறேன். எந்த பொறுப்பில் இருந்தாலும் மக்களின் ஒருவனாக இருந்து கடமையாற்றுவேன். தாய் தந்தையை விட்டு பிள்ளைகள் பிரியலாம், அவர்கள் மீண்டும் வருவதை பெற்றோர் ஆவலோடு காத்திருப்பார்கள்.

புதிய இயக்கத்தில் இணைந்ததாக பார்க்கவில்லை, ஏற்கனவே இருந்த கட்சிக்கு வந்திருக்கிறீர்கள். நல்ல பிள்ளைகளாக உங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தாமதமாக வந்தாலும் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள்.

ஜனநாயக போர்க்களத்தில்தான் நமக்கு நிறைய பணிகள் உள்ளன. மத்தியிலும், மாநிலத்திலும் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கலாம்” என்று தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.