எந்நேரத்திலும் மஹிந்த மீண்டும் பிரதமராகலாம்!

0

தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நீண்ட தூரம் பயணத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஆகையால் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் பிரேரணையையொன்று எந்நேரத்திலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் பயணிப்பதை ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சிலரே விரும்பவில்லை. ஆகையால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி மற்றும் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு மஹிந்த மீண்டும் பிரதமராவாரென்ற அச்சம் நிலவுகின்றது.

ஆகையால்தான் மஹிந்தவை சார்ந்த உறுப்பினர்களின் நாடாாளுமன்ற பதவியை பறிப்பதற்கான செயற்பாடுகளை இரு கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் நாமும் மஹிந்தவை பிரதமராக்குவது தொடர்பில் ஏனைய சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றோம்.

அந்தவகையில் ஐ.தே.க.வுக்கு எதிராக பிரச்சினைகள் மேலோங்கும்போது நாம் மஹிந்தவை பிரதமராக்கும் பிரேரணையை முன்வைப்போம்” என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.