‘கலக்கப் போவது நீ தான்’ நம்மை சிரிக்க வைக்கும் நாஞ்சில் விஜயனின் சோகக் கதை!

1

விஜய் டிவியில ‘லேடி கெட்டப் போடுவாரே… அவர் தான் சொன்னாங்களாம்’.. அதைக் கேட்டதுமே பொண்ணு வீட்டாரின் முகமே மாறிப்போச்சாம்

பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒவ்வொரு தினமும் வாழ்க்கையை கடத்தும் சாமானிய குடிமகனை எளிதில் சிரிக்க வைக்கக் கூடிய பெரும் பணியை செய்து கொண்டிருப்பவர்கள் நகைச்சுவை நடிகர்கள். அப்படி, சிரிக்க வைக்கும் பல காமெடியன்களின் வாழ்க்கை நெடியுடன் இருக்கிறது என்பதே ஆதிகாலம் தொட்டு இருந்து வரும் மறுக்க முடியாத உண்மை. அப்படியொரு, காமெடியனின் நெடி கலந்த வாழ்க்கையையும், படி கொண்டு அவர் முன்னேறிய பக்கங்களையும் மெலிதாய் நேயர்களுக்கு கடத்துவதே இந்த செய்தி.

நாஞ்சில் விஜயன்… இந்தப் பெயரை இன்று தெரியாத தொலைக்காட்சி நேயர்கள் இருக்க முடியாது. ‘கலக்கப் போவது யாரு’ மூலம் வாழ்க்கை பயணத்தைத் தொடங்கி, நிகழ்ச்சியில் கைத் தட்ட ஆட்களை திரட்டும் பணியை செய்துக் கொண்டு தினம் வாழ்க்கையை நடத்தி, இன்று சிரிச்சாப் போச்சு குழுவின் பிரைம் காமெடியனாக வளர்ந்து நிற்கிறார்.

அவரைப் பற்றித் இதோ, அவரே சொல்லக் கேட்போம்,

நாஞ்சில் விஜயன் யார்? அவரைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

எனது சொந்த ஊர் நாகர்கோவில். அதனால், நாஞ்சில் என்பது எனது பெயருக்கு முன்னாள் சேர்ந்துவிட்டது. சின்ன வயதிலேயே அம்மா இறந்துட்டாங்க.. அப்பா விட்டுட்டுப் போயிட்டார். பாட்டி தான் எங்களை எடுத்து வளர்த்தாங்க. எனக்கு ஒரு தங்கச்சி, தம்பி. நான் நல்லா படிக்குற பையன். 10th-ல 438 மார்க். கணிதத்தில் 97 மதிப்பெண் எடுத்தேன். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என எதையும் விடுவதில்லை. படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். சினிமாவுக்கு வரும் எண்ணமெல்லாம் துளிகூட இல்லை.

எல்லாரும் சென்னைக்கு வந்துதான் கஷ்டப்படுவாங்க. ஆனா, நான் சொந்த ஊருலயே சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாம கஷ்டப்பட்டிருக்கேன். இதனால், சென்னை எனக்கு கஷ்டமா தெரியல. சொந்த ஊருலயே, காலேஜ் முடிச்ச அப்புறம் எங்க போய் தங்குறதுன்னு கூட தெரியாம திரிஞ்சிருக்கேன்.

அப்பா குடிக்கு அடிமையாகிவிட்டார். இதனால், அம்மா ரொம்பவே மனசு ஒடிஞ்சுப் போயிட்டாங்க. ஒருநாள், அந்த வேதனை தாங்காம, எங்க கண் முன்னாடியே தீக்குளிச்சு இறந்து போயிட்டாங்க. அப்போ நானே சின்னப் பையன். என் தம்பி, தங்கைலாம் ரொம்ப சின்னப் பசங்க. அம்மா இறந்த பிறகு அப்பாவும் எங்களை விட்டுட்டுப் போயிட்டார். அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னே தெரியல.. வாழ்க்கையே இருண்டு போன மாதிரி ஆகிடுச்சு.

ஆனால், அதன் பிறகு எனக்கு இருந்த பேச்சுத் திறமையால் அப்படி இப்படி என கஷ்டப்பட்டு சென்னைக்கு வந்து இங்கேயும் கஷ்டப்பட்டேன். பிறகு, கலக்கப் போவது யாரு ‘சீசன் 4’-ல் நான் கலந்து கொண்டேன். சிவகார்த்திகேயன் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். நான் நான்காவது சீசனில் கலந்து கொண்டேன்.

ஆனால், முதல் சுற்றிலேயே நான் வெளியேற்றப்பட்டேன். அந்த சிறிய வயதில் பதட்டம், பயம் போன்றவற்றால், சரியாக பெர்ஃபாமன்ஸ் பண்ண முடியாமல் தோற்று வெளியேறினேன். அதன்பிறகும், எனது முயற்சியை கைவிடாமல் வேறு வேலைகளை செய்துக் கொண்டிருந்தேன். பெர்ஃபார்மராக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், ஷோக்களுக்கு ஆட்களை அழைத்து வரும் வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.

சினிமாவுக்கும் ஆட்கள் அழைத்து வரச் சொன்னார்கள். அதில் கிடைத்த வருமானத்தால் அன்றைய தினம் எனக்கு ஓடியது. ஆனால், எதற்காக சென்னை வந்தேனோ, அதைவிட்டு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை உணரத் தொடங்கினேன்.

அதை எங்களது சிரிச்சாப் போச்சு, கலக்கப் போவது யாரு இயக்குனர் தாம்சனிடம் வெளிப்படுத்தினேன். அவர் தான் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தினார்.

அந்த நொடி முதல், மீண்டும் கடுமையாக உழைத்து பெர்ஃபாமராக வேண்டும் என முடிவு செய்தேன். இன்று உங்கள் முன்பு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.

‘சிரிச்சாப் போச்சு’ டீமில் மட்டும் தெரியும் ஒரு புரிதலுக்கு என்ன காரணம்?

எக்ஸ்பீரியன்ஸ் தான்… எங்கள் டீமில் ஒரு அனைவருக்குள்ளும் ஒரு Bond இருக்கும். அது என்ன Bond என்பதை நான் சொல்ல விரும்பவில்லை(சிரிக்கிறார்). எங்களுடன் ஒருநாள் டிராவல் செய்தால் உங்களுக்கு புரிந்துவிடும். எங்கள் அணியில் யார் யாருக்கு என்ன தெரியும்?, என்ன வரும்? என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருப்போம். ஈகோ இல்லாத அணி எங்களுடையது.

உங்களின் எதிர்கால திட்டங்கள் என்ன?

எனக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், இன்னும் அதற்கான முயற்சி எடுக்கவில்லை. பட்.. இப்போது ஷோஸ், ஈவன்ட், சோஷியல் மீடியா என்று நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படியே போகட்டும் என இருக்கிறேன். எதிர்காலத்தை நோக்கி பெரிய திட்டம் இப்போதைக்கு இல்லை. அன்று நான் பட்ட கஷ்டத்திற்கு இப்போது ஓரளவிற்கு நன்றாக இருக்கிறேன். இதுபோதும் என நினைக்கிறேன்.

அப்படி நீங்கள் அன்று நினைத்திருந்தால், ஆள் சேர்க்கும் பணியில் இருந்து ஆர்ட்டிஸ்ட்டாக மாறியிருக்க மாட்டீர்களே!

உண்மை தான். ஆனால், அன்று நான் இருந்ததை நினைத்து கம்பேர் செய்து பார்த்தால், இது திருப்தியாக உள்ளது. எதிர்காலத்தை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை.

சினிமா வாய்ப்புகள்?

வாய்ப்புகள் வருகிறது. அட்டக்கத்தி தினேஷ் சாருடன் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தில் நடித்தேன். விக்ரம் பிரபு சாருடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ‘கன்னி ராசி’ என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சில சிறிய படங்களில் நடிக்கின்றேன்.

பெண் கதாபாத்திரங்களில் இருந்து எப்படி வெளியே வந்தீர்கள்?

உண்மையில் இன்னும் வெளியே வரவில்லை. இன்னமும் என்னை வெளியில் எங்கு பார்த்தாலும், ‘அந்த லேடி கெட்டப் போடுறவர் போறார் பாருங்கள்’ என்று தான் சொல்வார்கள். அது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். வேறுவழியில்லை. இது என் தொழில்.

இன்னும் எனக்கு கல்யாணம் ஆகவில்லை. பொண்ணு பார்க்குறதுக்கே ஒரு மாதிரியா இருக்கு. ரிலேஷன்ஸ் கிட்ட சொல்லி பொண்ணு பார்க்கச் சொன்னோம். அப்போ, பொண்ணு வீட்டுல மாப்பிள்ளை என்ன பண்றாருன்னு கேட்டப்போ, விஜய் டிவியில ‘லேடி கெட்டப் போடுவாரே அவர் தான் சொன்னாங்களாம்’.. அதைக் கேட்டதுமே பொண்ணு வீட்டாரின் முகமே மாறிப் போச்சாம்… பொண்ணு பார்க்கப் போனவங்க, என்கிட்டே இத சொன்னாங்க. அதுனால, பெண் கெட்டப்பை முடிந்த அளவு தவிர்த்து வருகிறேன்.

வாய்ப்பு தேடும் இளம் தலைமுறையினருக்கு உங்கள் அட்வைஸ் என்ன?

இப்போது வாய்ப்பு தேடுகிறவர்களிடம், நீ என்ன பண்ணுவ என்று கேட்டால், ‘எதுனாலும் ஓகே என்று சொல்கிறார்கள்’. எதில் தனக்கு தனித்திறமை இருக்கிறது என்பதை கண்டறியாமல், எப்படியாவது பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கில், காமெடியும் ஓகே, டான்ஸும் ஓகே, ஆபிஸ் பாய் என்றாலும் ஓகே என்று சொல்கிறார்கள்.

எனக்கு தெரிஞ்ச ஒரு பையன், ஏழு வருடமாக நடிக்க வாய்ப்புக் கேட்டுக் கொண்டிருந்தான். சரின்னு அவனுக்கு ஒரு படத்துல சான்ஸ் வாங்கிக் கொடுத்தா, அவனுக்கு சுத்தமா நடிப்பே வரல.. நடிப்பே வரல என்பதை அன்று தான் அவனே உணர்ந்தான். இது தெரியாமல், ஏழு வருடங்களை அவன் வீணடித்துவிட்டான். ஸோ, சினிமாவிலோ, டிவி ஷோக்களிலோ சாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் தங்களுக்கு எதில் திறமை உள்ளது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு, அதில் வாய்ப்பு தேடினால் நல்லது.


அதுமட்டுமின்றி, வாய்ப்பு தேடும் போது டெடிகேஷன் இருக்க வேண்டும். பலர் அதிலும் கோட்டை விடுகிறீர்கள்.

இறுதியாக ஒரு கேள்வி, விஜய் டிவியில் காமெடி ஷோக்களில் ராமர் வலுக்கட்டாயமாக முன்னிறுத்தப்படுகிறாரா?

அவர் எப்போதோ இந்த இடத்திற்கு வந்திருக்க வேண்டும். இதுவே ரொம்ப லேட். இந்த இடத்திற்கு அவர் முழுவதும் தகுதியானவர்.

-அன்பரசன் ஞானமணி

1 Comment
  1. Ansgar says

    Post ah copy cut paste panirkinga ok. Athukaga interview panna editor nameodaya post panuvinga ?.

Leave A Reply

Your email address will not be published.