“காந்தியை நான் மகாத்மாவாக பார்க்கவில்லை”- பிபிசி பேட்டியில் அம்பேத்கர்

0

அம்பேத்கர் 1955இல் பிபிசி வானொலிக்கு அளித்த நேர்காணலில் காந்தி குறித்து பல கசப்பான கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

பிபிசி இடம் அம்பேத்கர் தெரிவித்த கருத்துகளை கீழே தொகுத்துள்ளோம்.

நான் 1929இல், காந்தியை சந்திக்க வேண்டும் என்று கூறிய, எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம், காந்தியை முதல் முறை சந்தித்தேன்.

என்னைச் சந்திக்க விரும்புவதாக காந்தி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். வட்டமேசை மாநாட்டுக்கு செல்லும் முன் இது நடந்தது.

இரண்டாவது வட்டமேசை மாநாட்டுக்கு காந்தி வந்திருந்தார். அவர் முதல் வட்ட மேசை மாநாட்டுக்கு வரவில்லை. அங்கு (லண்டன்) 5-6 மாதங்கள் இருந்தார்.

அங்கு நான் அவரைச் சந்தித்தேன். இரண்டாம் வட்ட மேசை மாநாட்டிலும் பார்த்தேன். பூனா ஒப்பந்தம் கையெழுதானபின் என்னை வந்து பார்க்கச் சொன்னார்.

நான் அவரைப் பார்க்கப் போனேன். அப்போது அவர் சிறையில் இருந்தார். இவ்வளவுதான் நான் அவரைச் சந்தித்த நிகழ்வுகள்.

நான் காந்தியை ஓர் எதிராளியாகவே சந்தித்தேன் என்பதால், பலரையும்விட அவரை எனக்கு நன்றாகத் தெரியும்.

ஏனெனில், அவரது நச்சுப்பற்களை என்னிடம் அவர் காட்டினார். என்னால் அவரது அகத்தைப் பார்க்க முடிந்தது.

பிறர் பக்தர்களாக அவரைப் பார்க்கச் சென்றனர். நான் அவரது புறத்தோற்றத்தைத் தவிர, அவர் மகாத்மாவாகக் கட்டிக்கொண்ட வேறு எதையும் பார்க்கவில்லை.

அவரை ஒரு சாதாரண மனிதராக மட்டுமே பார்த்தேன். அதனால், அவருடன் தொடர்புடைய பலரையும்விட என்னால் காந்தியை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

மேற்கு உலகம் காந்தி மீது காட்டும் ஆர்வம் எனக்கு வியப்பாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.

இந்திய வரலாற்றில் காந்தி ஓர் அத்தியாயம்; அவர் வரலாறு படைப்பவர் அல்ல.

காந்தி இந்திய மக்களின் நினைவிலிருந்து ஏற்கனவே மறைந்துவிட்டார்.

அவரது பிறந்தநாள் மற்றும் அவர் தொடர்பான நாட்களில் விடுமுறை அளிப்பதன்மூலம் காங்கிரஸ் கட்சி அவரது நினைவைப் பாதுகாக்கிறது.

ஆண்டுதோறும் ஏழு நாட்கள் கொண்டாட்டம் நடந்தால் அவரை நிச்சயம் மக்கள் நினைவுகூர்வார்கள்.

இந்த ‘செயற்கை சுவாசம்’ மட்டும் இல்லாவிட்டால் அவரை என்றோ மக்கள் மறந்திருப்பார்கள்.

Leave A Reply

Your email address will not be published.