கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் ஆட்சியை கலைப்போம் – வெடிகுண்டு அடைக்கலம் எச்சரிக்கை!

0

எமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் ஆட்சியை கலைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பெரிய கோமரசங்குளம் பரலோக மாதா ஆலய மண்டபத்தில் அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ் தலைமையில் இன்று (ஞாயிறுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுடைய அபிலாசைகளுக்கு ஏற்றவகையில் செயற்படும் ஒர் கட்சி. அந்த வகையில் நாம் வெறும் கையோடு அல்லது வெறுமையான ஒர் ஆதரவை தெரிவித்திருக்க மாட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஒரு காரியத்தை சாதிக்க வேண்டுமானால் அதனை இராஜதந்திர முறையில் அணுக வேண்டும். எங்களது நாட்டிலே குறிப்பாக வடக்கு கிழக்கிலே எங்களுடைய மக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதற்கும் அப்பால் அரசியல் தீர்வை மேற்கொள்ள வேண்டும் என்பது எமக்கு பிரதான தேவையாக இருக்கின்றது.

அத்துடன் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு என்பன எங்களது பிரதேசங்களில் மக்கள் கோரிக்கையாக எழுந்திருக்கின்றது.

வெறுமனவே பிரதமராக வருகின்ற ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்து. கையை கட்டிக்கொண்டு இருக்கின்ற ஒரு நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் இருக்காது.

தற்போதைய நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருக்கின்றது. புதிய அரசாங்கம் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஆதரவு வழங்க வேண்டும்.

எனினும் இந்த அரசாங்கம் எமது மக்களுடைய கோரிக்கையை கவனத்தில் கொள்ளவில்லையாயின் இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் கொடுக்கின்ற ஆதரவை விலத்திக்கொள்கின்ற போது இந்த அரசாங்கம் கலைகின்ற அல்லது இல்லாமல் போகின்ற நிலைமை காணப்படும்.

அந்த சந்தர்ப்பத்தை நாமும் சரியாக பயன்படுத்தாமல் போனால் எமது மக்களுடைய பிரதிநிதிகளாகவோ எமது மக்களுடைய அபிலாசைகளை தீர்க்கின்ற அமைப்பாகவோ இருக்க முடியாது என்பதனையும் குறிப்பிட விரும்புகின்றேன்” என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.