சமஸ்டி ஆட்சிக்கும் வடக்கு- கிழக்கு இணைப்பையும் தடுக்கவே மஹிந்த பிரதமராக்கப்பட்டார்: எஸ்.பீ.திசாநாயக்க

0

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதை தடுக்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியதாக அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் திசாநாயக்க மேலும் கூறியதாவது,

“நாட்டின் சொத்துகளை பாதுகாக்கவும், வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், நாட்டில் சமஸ்டி ஆட்சி உருவாகுவதை தடுக்கவும், வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதை தடுக்கவுமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலை அகற்றி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கினார்.

மேலும் மஹிந்த நினைத்திருந்தால் பிரதமர் பதவியை ஏற்காமல் இருந்திருக்கலாம். ஆனால் தாய் நாட்டுக்காகவே அவர் இதனை பொறுப்பேற்றுள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்திற்குள் நடக்கும் எதுவும் சட்டரீதியானது அல்ல. ஜனாதிபதி பிரதமர் ஒருவரை நியமித்தால், சபாநாயகர் அவரை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2015 ஆம் ஆண்டு ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டபோது, அவருக்கு வெறும் 51 உறுப்பினர்களே இருந்தார்கள். ஆனால் எமக்கு 149 உறுப்பினர்கள் இருந்தார்கள். அப்போது நாம் எதிரணியில் இருந்தபோது சபாநாயகர் அதனை எதிர்க்கவில்லை.

ஆனால், இப்போது சண்டியர்களும் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்” என எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.