சுமந்திரனால் இலங்கையில் பாரிய வன்முறை வெடிக்குமாம்!

0

சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளால் நாட்டில் மீண்டும் இன வன்முறைகள் வெடிக்கலாம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மஹிந்தவாதியான எஸ்.பி.திஸாநாயக்க இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து ஒக்டோபர் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்ட போதிலும், நாடாளுமன்றம் மற்றம் நீதிமன்றின் ஊடாக அவரது பிரதமர் பதவி பறிக்கப்பட்டு ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது.

ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மஹிந்தவின் பிரதமர் பதவியை கவிழ்க்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் பதவியை இழந்த மஹிந்த ராஜபக்சவை சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவராக ஜனாதிபதி மைத்ரி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நியமித்துள்ள போதிலும், அதற்கும் மஹிந்தவிற்கு தகுதி இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சவால் விடுத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டு ஒரு மாதகாலம் கடந்துள்ள நிலையில், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இல்லாது போயுள்ளதாக தெரிவிக்கும் சுமந்திரன், இது தொடர்பில் ஆராய்ந்து முடிவொன்றை அறிவிக்க வேண்டும் என்று சபாநாயகரிடமும் வலியுறுத்தியிருக்கின்றார்.

இந்த நிலையில் மஹிந்தவின் எதிர்கட்சித் தலைவர் பதவியும் பறிபோகலாம் என்ற நிலமை உருவாகியுள்ள பின்னணியில், மஹிந்தவாதிகள் சுமந்திரனை இலக்கு வைத்து கடும் கண்டனத்தையும் எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச சுதந்திரக் கட்சியில் இருக்கின்றரா இல்லையா என்பது சுமந்திரனுக்கு தேவையில்லாதது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்கவும் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.