`துல்கர் ஆபத்தானவர்!’ – சோனம் கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவு;

0

சமூக வலைதளங்களில் நாம் பதிவிடும் பதிவுகள் சமயத்தில் பெரும் விவாதத்தை கிளப்பும். சில நேரங்களில் சர்ச்சை, சில நேரங்களில் சுவாரஸ்யங்கள். இவற்றைக் கணிப்பது கடினம். அதுவும் பிரபலங்களில் பதிவுகள் பல நேரங்களில் பெரும் செய்தி ஆவதும் நிகழும். ஆனால், பாலிவுட் ஸ்டார் சோனம் கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவு, சிக்கலான சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோனம் கபூர்

சோனம் கபூர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் துல்கர் சல்மான் கார் ஓட்டுகிறார். சோனம் அருகில் இருந்து வீடியோ எடுக்கிறார். துல்கர் ஸ்டியரிங்கைப் பிடிக்காமல் தனது இரண்டு கைகளாலும் செல்போனை இயக்கிக்கொண்டு இருக்கிறார். காரோ அந்த இரவில் மும்பை நகரில், ஓடிக்கொண்டிருக்கிறது. துல்கர் சாலையையும் பார்க்கவில்லை. இந்த வீடியோவை பகிர்ந்த சோனம், துல்கரை  `ஆபத்தானவர்’ எனக் குறிப்பிட்டிருந்தார். 

துல்கர் சல்மான்

சிறிது நேரத்தில் அந்த வீடியோவை மும்பை போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,  “சோனம் கபூர், உங்களின் கருத்தை நாங்கள் ஏற்கிறோம். சாலைகளில் இதுபோன்ற சாகசம் நிச்சயம் ஆபத்தானதுதான். இது மற்ற ஓட்டுநர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இதுபோன்ற காரியத்தை சினிமாவிலும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” எனத் தெரிவித்தது. 

கார்

மும்பை போலீஸின் இந்தப் பதிவால், துல்கர் சர்ச்சையில் சிக்கினார். நிலமையைப் புரிந்துகொண்ட சோனம் மற்றும் துல்கர், உடனடியாக முழு வீடியோவையும் பகிர்ந்தனர். அதில், கார் ஒரு ட்ரக்கில் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்படுவது தெளிவாகத் தெரிந்தது. 

சோனம் கபூர் தனது பதிவில்,  “நாங்கள் அந்தக் காரை ஓட்டவில்லை. கார் ட்ரக்குடன் கட்டப்பட்டுள்ளது. எங்கள் நலனில் அக்கறை கொண்டது மகிழ்ச்சி தருகிறது. சாதாரண மக்களிடம் இந்த அக்கறை இருக்கும் எனக் தெரியும். உங்கள் அக்கறைக்கு நன்றி ” எனக் குறிப்பிட்டிருந்தார். 

Leave A Reply

Your email address will not be published.