நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால்; மணிவண்ணனின் கனவு!

0

மணிவண்ணன் என்ற பெயர் எங்கேனும் உச்சரிக்கப்படுமெனில் சராசரிக்கும் சற்று குறைவான உயரமும், கருத்த தாடியும், அவரது ட்ரேட் மார்க் புன்னகையும் நம் கண் முன்னே ஓர் நொடி வந்து செல்லும்.

ஆம், சினிமா நடிகருக்குரிய தேவைகள் என சில தரப்பினரால் கருதப்பட்ட இலக்கணங்கள் ஏதுமின்றி, அவற்றையெல்லாம் கட்டுடைத்து தனது திறமையின் காரணமாக நெடிய காலம் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் அவர். அதனையெல்லாம் கடந்து அவர் தீவிரமானதோர் தமிழ் உணர்வாளர்.

ஜூலை 31, 1954ல் கோவை, சூலூரில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவரான மணிவண்ணனின் தந்தையார் ஆர்.எஸ் மணியம் திமுக தொண்டர் ஆவார். திராவிட சிந்தனைகளில் பற்று கொண்ட அவர், மார்க்சிய – லெனினிய கட்சியிலும் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். பின்னாட்களில் மதிமுகவிலும் அதன் பின்னர் நாம் தமிழர் கட்சியினூடேவும் இயங்கிவர் மணிவண்ணன்.

ஈழத்தில் இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், திராவிட கட்சிகள் தவிர்த்து இன்னபிற கட்சிகளும் ஈழ விவகாரத்தில் தீவிர போக்கினை கையாளவில்லை என்ற அதிருப்தியின் காரணமாகவே அவர் நாம் தமிழர் கட்சியினை கட்டமைப்பதில் தீவிர ஈடுபாடு காட்டினார் என்ற கூற்றினை சீமான் சில நேரங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

அப்படியான மணிவண்ணன், தமிழ் ஈழம் என்ற தேசம் உருவாக வேண்டுமென பெரும் கனவினை தன் நெஞ்சில் சுமந்தவர். தமிழ் ஈழம் தொடர்பான போராட்டங்கள் அத்தனையிலும் தன்னை உளப்பூர்வமாக ஈடுபடுத்திக்கொண்டவர் அவர்.

இளமைக்காலத்தில் மணிவண்ணன்

நான் ஈழத்தில் பிறந்திருந்தால், புலிகள் அமைப்பில் இணைந்து ஈழத்திற்காக போராடியிருப்பேன், இங்கே பிறந்ததால் ஈழத்திற்காக ஆதரவளிக்க மட்டுமே முடிகிறது” என வெளிப்படையாக பேசியவர் மணிவண்ணன்.

சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும், பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியும் பெரும் பிரபல்யத்தை பெற்றிருந்த போதிலும் அவர் சாமானியர்களிடம், சாமானியராகவே இருந்தார். ஈழம் குறித்த பெரும் கனவு அவர் நெஞ்சில் குடிகொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் மேலும், இயக்கத்தின் மேலும் பற்றுதல் கொண்டிருந்த மணிவண்ணனின் இறப்புக்கு பின்னர் அவரது உடல் மேல் புலிகள் இயக்க கொடியே போர்த்தப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. மணிவண்ணன் என்ற தனி மனிதன் மறைந்து போயிருக்கலாம்.. ஆனால், அவர் நெஞ்சில் சுமத்திருந்த தமிழீழ கனவு என்றென்றும் உயிர்ப்புடனேயே இருக்கும்.

அவரது விருப்பத்திற்கு இணங்க புலிக்கொடி போர்த்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.