நாளை.. நீதிமன்றத்தில், முன்னிலையாகவுள்ள மஹிந்த அணியினர்!

0

இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 முன்னாள் அமைச்சர்கள் நாளைய தினம்(புதன்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் மஹிந்தவுக்கு எதிரான வழக்கு விசாரணை என்பன ஒரே தினத்தில் இடம்பெறவுள்ளமையால், நாளைய அரசியல் களநிலவரம், பரபரப்பான இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட ஒக்டோபர் 26 ஆம் திகதிமுதல், இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதற்கெதிராக ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. உள்ளிட்ட தரப்பினரால் பிரேரணைகளும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறான நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்களினால் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட புதிய அமைச்சர்களுக்கு எதிராக கடந்த 23 ஆம் திகதி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணைகள் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், மஹிந்த மற்றும் புதிய அமைச்சரவைக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், 12 ஆம் திகதி இந்தத் தரப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த உள்ளிட்ட 49 முன்னாள் அமைச்சர்களும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பில், இவர்கள் உயர்நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், நாளைய இந்த விசாரணைகளானது தற்போதைய பரபரப்பான அரசியல் களத்தில், முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.