பா.ஜ.க.வின் ரத யாத்திரைக்கு அனுமதியளித்தது நீதிமன்றம்!

0

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. நடத்தவுள்ள ரத யாத்திரைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) அனுமதியளித்துள்ளது.

பா.ஜ.க.வின் மேன்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ரதயாத்திரைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். அத்துடன் ரத யாத்திரைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்தார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை கருத்திற்கொண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

இந்த யாத்திரைக்கு பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா தலைமை தாங்கவுள்ளார். ஆனால் இந்த யாத்திரைக்கு மாநில அரசு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

இதையடுத்து ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி மாநில பா.ஜ.க. சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மத ரீதியிலான மோதல்கள் ஏற்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்தார். இதையடுத்து பா.ஜ.க. சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது. இதன் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, நீதிபதி தபப்ரதா சக்கரவர்த்தி கூறுகையில், ‘12 மணி நேரம் மட்டுமே பேரணி நடத்த வேண்டும். மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு பங்கம் விளைவிக்காத வகையில் அமைதியான முறையில் ரத யாத்திரையை நடத்த வேண்டும். யாத்திரையால் பாதிப்பு வந்தால் அதற்கான முழு பொறுப்பையும் பா.ஜ.க. ஏற்கவேண்டும்” என்று நிபந்தனை விதித்தார்.

கொல்கத்தா நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மாநில பா.ஜ.க.வினர் வரவேற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.