புதிய அமைச்சரவை இன்று இல்லை, 48 மணி நேர அவகாசம்- UNP

0

புதிய அமைச்சரவைக்கான நியமனங்கள் இன்றைய தினம் (17) இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவைப் பதவிகள் குறித்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னரேயே நியமனங்கள் இடம்பெறும் எனவும் கூறப்படுகின்றது.

நேற்றைய தினம் (16) பிரதமர் நியமனம் இடம்பெற்றதன் பின்னர் ஜனாதிபதியுடன்  கலந்துரையாடல் இடம்பெறவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.

இருப்பினும், அடுத்த 48 மணித்தியாலத்துக்குள் புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன ஊடகங்களிடம் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கத்தில் கபினட் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட வேண்டியுள்ளது. இந்த 30 இல் கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்படவும் வேண்டும். கட்சியிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களைத் திருப்திப்படுத்தவும் வேண்டியுள்ளது.

மட்டுமல்லாது, அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்கு எதிரணியிலிருந்து உறுப்பினர்களை பெற்றுக் கொள்வதற்காக விலைகொடுக்க வேண்டிய அமைச்சுப் பதவிகளும் உள்ளன. இதுபோக, கட்சியில் பின்னாசன எம்.பி.க்கள் இழந்த பிரதமர் பதவியை பெற்றெடுப்பதற்கு உழைத்த நன்றிக்கடனுக்காக பகிர்ந்தளிக்க வேண்டியவைகளும் உள்ளன.

இவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே அதிக கால அவகாசம் தேவைப்படுகின்றது என்பது மட்டுமே உண்மையாகலாம். 

புதிய அரசாங்கத்தின் ”பட்ஜட்“ பெப்ரவரியில்

புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் முன்வைக்க முடியுமாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா அறிவித்துள்ளார்.

அதற்கிடையில் இடைக்கால கணக்கு அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாகவும், இதற்கும் ஏரிரு நாட்கள் தேவைப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாளை (18) நடைபெறவுள்ள சபை அமர்வின் போது வரவு செலவுத் திட்டமோ, இடைக்கால கணக்கு அறிக்கையோ முன்வைக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரச துறையிலுள்ளவர்களுக்கான ஜனவரி மாத சம்பளம் உட்பட அரச செலவினங்களுக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசரமாக இடைக்காலக் கணக்கு அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave A Reply

Your email address will not be published.