புலிகள் நாட்டைவிட்டு தப்பி ஓடினார்களா? கொந்தளிக்கும் முன்னாள் போராளி துளசி

0

கடினமான சூழ்நிலையிலும் புலிகளின் தலைமையோ தளபதிகளோ நாட்டைவிட்டு தப்பி ஓடுவதற்கு எத்தணிக்கவில்லை. அவர்கள் இறுதிவரை போராடி அம்மண்ணிலேயே தங்களை அர்ப்பணித்துக்கொண்டார்கள் என்பதே உண்மை என்று ஐனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக மையத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது,

“தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கு மத்தியில் தமிழர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அசாதாரண நிலமைகள் தொடர்பாக மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பினால் எந்ததொரு பிரச்சினைகளும் நாட்டில் ஏற்பட்டிருக்காத நிலையில், தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் அசம்பாவிதங்களுக்கு புலிகளை சுட்டிகாட்டுவது வெறுமனே ஒரு கண் துடைப்பாகவே அமைந்துள்ளது.

வவுணதீவு சம்பவம் தொடர்பில் சரியான முறையில் விசாரணைகள் இடம்பெறுவதற்கு முன்னர் அவ்விடயத்தில் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்துவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். விசாரணைகள் முடிவடையும் வரை உங்களது அனுமானங்களை மிக கவனமாக வெளியிட வேண்டுமென கேட்டுகொள்கிறோம்.

மேலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்க பலர் முனைகின்றார்கள். இன்று பொட்டம்மானை கொண்டு வந்திருக்கிறார்கள் இனிவரும் காலங்களிலே தளபதிகளான பால்ராஜ், கிட்டு, செல்லகிளி போன்றவர்களையும் கொண்டுவரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

கடினமான சூழ்நிலையிலும் புலிகளின் தலைமையோ, தளபதிகளோ நாட்டைவிட்டு தப்பி ஓடுவதற்கு எத்தணிக்கவில்லை. அவர்கள் இறுதிவரை போராடி அம்மண்ணிலேயே தங்களை அர்ப்பணித்துக்கொண்டார்கள் என்பதே உண்மை.

போராளிகளான நாங்கள் அரசியல் கட்டமைப்பாக, ஐனநாயக முறையில் இலங்கைத் தேர்தல் திணைக்களத்தில் பதிவுகளை மேற்கொண்டு அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.

இதேவேளை தமிழர்களை பேரம்பேசும் சக்தியாக திகழும் கூட்டமைப்பு, அரசியல் கைதிகளின் விடயத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்ற திட்டங்களை நாம் வழங்கியுள்ளோம். அவர்களின் விடுதலை தொடர்பாக ஓரிரு தினங்களில் முக்கியமான செய்தியை கூட்டமைப்பு வெளியிடும் என நம்புகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.