மட்டக்களப்பில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டன.

காணிகளுக்கான ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் நடைபெற்றது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலணியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்த 8.5 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 2.5 ஏக்கரும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓந்தாச்சி மடத்தில் 0.5 ஏக்கரும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொக்கட்டிச்சோலையில் 0.75 ஏக்கரும் வெலிக்கந்த பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோணி தாண்டமடுவில் 5 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளன. இதில் 5 ஏக்கர் மகாவலிக்குட்பட்ட அரச காணியும், 3.5 ஏக்கர் பொது மக்களின் காணியுமாகும்.

இக்காணிகளுக்கான ஆவணங்கள் கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில அநுர ஜயசேகரவினால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதையடுத்து கையளிக்கப்பட்ட ஆவணங்களை ஆளுநர் ரோஹித போகொல்லாகம, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறீகாந்தியிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் உட்பட திணைக்கள தலைவர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் இராணுவ பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் சமயத் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.