மீண்டும் பலத்தைக் காட்டினார் ரணில்! நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றம்!!

0

மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு 6ஆவது தடவையும் படுதோல்வி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு கோரி – அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை மாலை 117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ரணிலுக்கு நேசக்கரம் நீட்டும் வகையில் பிரேரணைய ஆதரித்து வாக்களித்தது. ஜே.வி.பி. எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவைப் பரிந்துரைத்து அவருக்கு நம்பிக்கையைத் தெரிவிக்கும் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவையில் முன்வைத்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, பழனி திகாம்பரம், மங்கள சமரவீர, சஜித் பிரேமதாஸ ஆகியோரால் கொண்டவரப்பட்ட பிரேரணையில்,

”நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அமைச்சராகச் செயற்படுவதற்கு நாடாளுமன்றத்தின் அதிக நம்பிக்கை அவர் மீது உண்டு என இத்தால் இந்தச் சபை பிரேரணை நிறைவேற்றுகின்றது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, மாவை சேனாதிராஜா, அநுரகுமார திஸாநாயக்க, ஜயந்த கருணாதிலக ஆகிய எம்.பிக்களின் உரைகள் முடிவடைந்த பின்னர், வாக்கெடுப்புக்குரிய அழைப்பை சபாநாயகர் விடுத்தார்.

இலத்திரனியல் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 117 வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதிராக ஒரு வாக்குகூட அளிக்கப்படவில்லை. மஹிந்த – மைத்திரி கூட்டணி எம்.பிக்கள் சபை அமர்வை இன்றும் புறக்கணித்திருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு கோரி – அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டதையடுத்து மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு 6ஆவது தடவையும் சபையில் படுதோல்வி ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

1. பிரதமர் பதவியில் இருந்த மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் 
2. மஹிந்தவின் உரை மீது வாக்கெடுப்பு
3. மஹிந்தவுக்கு எதிராக இரண்டாவது முறையும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் 
4. பிரதமர் செயலகத்துக்கான நிதியை முடக்கும் தீர்மானம் 
5. அமைச்சுகளுக்கான நிதியை முடக்கும் தீர்மானம்

மேற்படி 5 தீர்மானங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகியன கூட்டாக நிறைவேற்றின. தற்போது 6ஆவது தீர்மானத்தை ஐக்கிய தேசிய முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து நிறைவேற்றியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.