வடக்கு அபிவிருத்தி அமைச்சை தந்தால் அரசுடன் இணைவேன் ! டக்ளஸ் தெரிவிப்பு

0

வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்ற அமைச்சை மீள வழங்கினால் தேசிய அரசில் இணைவதற்குத் தயார் எனத் தெரிவித்துள்ளார் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.

இந்த அமைச்சுக்களை ஏற்றுத் தமிழ் மக்களுக்குச் சேவை செய்யத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வராமைக்கான காரணத்தை தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் தலமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

தற்போது வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் அமைச்சுக்களை பிரதமரிடம் கொடுத்துள்ளார்கள். ஆனால் பிரதமருக்கும் எமது மக்களுக்குமான தொடர்பு என்ன ? அவரது கடந்த காலச் செயற்பாடு என்ன? இந்நிலையில் அந்த அமைச்சு தமிழ் மக்களது உணர்வுகளோடு தொடர்புபட்ட தரப்பினருக்கே வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

ஏன் இந்த அமைச்சைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெற்றிருக்கக் கூடாது ? அவ்வாறு அமைச்சைப் பெற்றுத் தமிழ் மக்களுக்கு அவர்கள் ஏன் சேவை செய்ய முன்வந்திருக்கக்கூடாது? அமைச்சர் மனோ கணேசன் கூறுவதுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் அரசில் இணைந்து தமிழ் மக்களுக்குச் சேவை செய்யக்கூடாது ?

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இங்கே அரசுடன் கள்ளத் தொடர்பை வைத்திருக்கவும், தரகுச் செயற்பாட்டை மேற் கொள்ளவுமே விரும்புகின்றது. தேர்தல் நேரத்தில் மக்களை உசுப்பேற்றுவதும், அவர்களது பிரச்சினையின்போது மெளனமாக இருப்பதுவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடாகவுள்ளது.”

Leave A Reply

Your email address will not be published.