வவுணதீவு பொலீசார் மீதான கொலை தொடர்பில் கசிந்துள்ள புதிய தகவல்

0

மட்டக்களப்பு வவுணதீவு பொலீசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியபடி உள்ளது.

அதாவது குறித்த கொலைச்சம்பவத்தில் இதுவரை முன்னாள் போராளிகள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லாத நிலையில் இதனை வேறு யார் செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டிய நிலை பாதுகாப்பு தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது

அந்த வகையில் குறித்த கொலைச்சம்பவத்தில் மண் கடத்தல் கும்பலுக்கு தொடர்வு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொலைச் சம்பவம் நடந்த சோதனைச்சாவடி ஊடாக மண் கடத்தல் கும்பல் ஒன்றினால் இரவு நேரங்களில் சட்டவிரோத மண் மற்றும் மரங்கள் கடத்தப்பட்டு வந்ததாகவும் இதற்கு பொலீசார் தடையாக இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேசத்தில் இருந்து இரவு நேரங்களில் வவுணதீவு வழியாக கள்ள மண் மற்றும் மரங்கள் கடத்தப்பட்டமை ஏற்கனவே பொலீஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளதுடன்.

குறித்த கடத்தல் செயற்பாடுகளுக்கு விசேட அதிரடிப்படையினர் பலத்த எதிர்ப்பை தெரிவித்து வந்ததுடன் சட்டவிரோத மண் மற்றும் மரக் கடத்தலை தடுப்பதற்கான பணிகளை விசேட அதிரடிப்படையினர் பொறுப்பேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தென்னிலங்கை அரசியல் வாதிகளின் ஆதரவுடன் பல மண்கடத்தல் கும்பல்கள் செயற்படுவதாகவும் அவர்களில் பலர் கடந்தகால ஆயுதக்குழுக்களில் அங்கம் முக்கிய பதவி வகித்தவர்கள் என்பதுடன் அவர்கள் பல அரச அதிகாரிகளின் ஆதரவுடன் இவ்வாறான மண்கடத்தலில் ஈடுபட்டுவருகின்றமை தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் ஏறாவூர்பற்று பகுதியில் சட்டவிரோத மண் கடத்தலை தடுப்பதற்காகச் சென்ற விசேட அதிரடிப்படையினர் மீது மண் கடத்தல் கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி அவர்களை கொலை செய்யும் அளவுக்கு செயற்பட்டதாகவும் மட்டக்களப்பில் சட்டரீதியான மண் அனுமதிப்பத்திரங்களை வைத்துள்ள மண் முதலாலிகளே இரவு நேரங்களில் இவ்வாறு கடத்தலில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தங்களது கடத்தல் தொழிலுக்காக குழுக்களை உருவாக்கி செயற்படுவதாகவும் குறித்த குழுவில் மாவட்டத்தில் உள்ள சில பாதுகாப்பு தரப்பினரும் உள்ளதாகவும் குறித்த குழு யாரையும் கொலை செய்யும் நிலைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளதனால் அந்த தரப்பினர் குறித்தும் விசாரணை நடத்த வேண்டிய தேவை உள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிநிலையை நிடிப்பதற்கு தென்னிலங்கையில் உள்ள சிலர் வர்த்தக நோக்கங்களை முதன்மை படுத்தி இது போன்ற சம்பவங்களுக்கு மண்கடத்தல் காரர்களை தூண்டியிருக்கலாம் என்பதனால் மாவட்டத்தில் உள்ள மண்கடத்தல் காரர்கள் குறித்தும் அவர்களுடன் தொடர்பில் இருக்கும் முன்னாள் ஆயுதக்குழுக்கள் பாதுகாப்பு தரப்பினர் பொலீசார் அரச அதிகாரிகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவை பொலீஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்தகாலங்களில் ஏறாவூர்பற்று பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்ட குழுவொன்று பிரதேச செயலாளரின் அனுமதியுடன் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி பொலீசாரிடம் பிரதேச செயலாளரின் கையொப்பங்கள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்திருந்த நிலையில் பின்னர் அது பொலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் எனக் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பிற்கு வருகை தந்துள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் வவுணதீவு சம்பவத்தை மண்கடத்தல் சம்பவத்துடனும் ஒப்பிட்டு விசாரணைகளில் ஈடுபட்டுவருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.