இந்தியாவில் இன்னும் ஒரு இலட்சம் ஈழ அகதிகள்! அழைத்து வர இலங்கை விருப்பம்!!

0

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் அனைவரையும் நாட்டிற்கு மீண்டும் அழைத்துக்கொள்ள விரும்புவதாக இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஒஸ்டின் பெர்னாண்டோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் தங்கியிருந்த சுமார் 5,000 அகதிகள் ஏற்கனவே தாயகம் திரும்பியுள்ள நிலையில், தற்போது எஞ்சியுள்ள அகதிகளையும் சொந்த நாட்டிற்கே அழைத்துக்கொள்ள விரும்புவதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால், சுமார் 1 இலட்சம் அகதிகள் இந்தியாவில் தஞ்சம் கோரியதாகவும் ஒஸ்டின் பெர்னாண்டோ தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவர்களில் 70 வீதமானோர் நாட்டிற்கு மீண்டும் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து அவர்களிடம் கலந்துரையாடுவதற்கு விரைவில் தென்னிந்தியாவில் அமைந்துள்ள அகதி முகாம்களுக்கு நேரடியாகச் செல்லவுள்ளதாகவும் தூதுவர் ஒஸ்டின் பெர்னாண்டோ மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், அவர்களுக்கான தங்குமிட வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகள் தொடர்பிலும் அதிகக் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.