கடும் போக்குடைய புலம்பெயர் தமிழரால் சிக்கல் இல்லை! சுமந்திரன்

0

நியாயமான அதிகாரப் பகிர்வுக்கு புலம்பெயர் சமூகம் பச்சைக்கொடி

– சுமந்திரன் எம்.பி. நம்பிக்கை

“தீவிரவாதப் போக்குடைய புலம்பெயர் சமூகத்தினர் மிகச் சிறிய எண்ணிக்கையிலேயே உள்ளனர். எனவே, இலங்கையில் புதிய அரசமைப்பின் ஊடாக நியாயமான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால் அதற்குப் பெரும்பான்மையான புலம்பெயர் சமூகத்தினர் தமது ஆதரவை வழங்குவார்கள்.”

– இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இலங்கை நட்புக் குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று புதன்கிழமை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பில் சுமந்திரன் எம்.பியும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இந்தப் பேச்சில் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்திய சுமந்திரன் எம்.பி., கடந்த டிசம்பர் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைபு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன்பதாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, “கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் நாம் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது” என்று இந்தச் சந்திப்பின்போது இரா சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் அத்தகைய கடும்போக்காளர்களை மக்கள் தோற்கடித்திருக்கின்றார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.