சிங்களப் படைகள் போர்க்குற்றமே செய்யவில்லையாம்!

0

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் போர் முடிவடைந்து இந்த வருடம் மே மாதத்துடன் 10 ஆண்டுகள் ஆகப் போகின்றன. அதாவது ஒரு தசாப்தம் ஆகப் போகின்றது.

இந்த நிலையில், இனப்படுகொலைக்கு வெள்ளையடிக்கும் முயற்சிகளில் மீண்டும் சிங்களப் பேரினவாதிகளும் அதன் அரசும் முயன்று வருகின்றது. நடந்தது இனப்படுகொலை என்று வலுவாக உரைத்து, அதற்கான நீதியை பெற்றுக்கொள்ள வேண்டிய நேரத்தில் சிங்களத்தின் கால்களை நக்கிக் கொண்டிருக்கிறது ஈழத் தமிழர்களின் விலைபோன தலைமை. 


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை ஈழத் தமிழினம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

ஒன்றரை லட்சம் மக்களை கொன்று இன அழிப்பு வெறியாட்டத்தை செய்தது சிங்கள அரசு. ஈழத் தமிழ் மக்கள்மீது குண்டுகளை வீசியும் சுட்டுக் கொன்றும் பழி தீர்த்தது சிங்களம். சரணடைந்த பெண்கள், போராளிகள் எல்லாம் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொன்று அழிக்கப்பட்டார்கள். குழந்தைகள் என்றுகூட பாராமல் அரங்கேறியது சிங்கள இனவெறி அரசின் அராஜகம். 

அப்பாவிச் சிறுவன் பாலச்சந்திரன்மீது சிங்கள இராணுவம் நடத்திய கோரப்படுகொலையே இந்த உலகத்திற்கு நல்ல சான்று.

தமிழீழக் குழந்தைகள்மீது எத்தகைய இனவெறித் தாக்குதலை சிங்கள அரசு நடத்திற்கு என்பதற்கு சாட்சி. அப்பாவி சிறுவனின் நெஞ்சில் இரும்புத் துப்பாக்கியை வைத்து, அவனை சுட்டுக் கொன்ற கொடிய அரசு. கொடிய இராணுவம். சகோதரி இசைப்பிரியாமீது நடத்தப்பட்ட பாலியல் இனவெறிப் படுகொலை ஒன்றே உலகத்திற்குப் போதும். 


சிங்கள அரசு ஈழப் பெண்களை இறுதி யுத்த களத்தில் எப்படி நர வேட்டை ஆடியது என்பதற்கு சாட்சி அது. அப்பாவி போராளிகளை சரணடையச் செய்து, அவர்களின் ஆயுதங்களைப் பிடுங்கிக் கொண்டு அவர்களிடம் வீரம் காட்டியது சிங்களப் படைகள். எத்தனை களங்களின் எம் போராளிகளிடம் அடி வாங்கிக் கொண்டு ஓடியவர்கள் சிங்களப் படைகள். பொதுமன்னிப்பு வழங்கப்படும் சரணடையுங்கள் என்று கூறி, ஆயுதங்களை கீழே போட்ட பின்னர், வெள்ளைக் கொடியுடன் வந்தவர்கள்மீது தாக்கிய கோழை அரசு, சிங்கள அரசு. 

இப்போது மீண்டும் ஜெனீவாப் புராணம் தொடங்கியுள்ளது. மைத்திரி – ரணில் அரசு இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இனப்படுகொலை குற்றச்சாட்டியிலிருந்து, இலங்கையையும் ராஜபக்சேக்களையும் சிங்களப் படைகளையும் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. அதற்காக, இலங்கையில் இறுதி யுத்தத்தில் மீறல்கள் இடம்பெற்றன. அதனை ஒப்புக்கொள்கிறோம் என்றும் அதற்கு உள்ளக விசாரணையை நடத்துவதாகவும் சிங்கள அரசு வாக்குறுதி அளித்தது. 


இலங்கை அரசு, போர்க்குற்றத்தில் ஈடுபட்டது என்றும் பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா படுகொலைகள் மிகவும் கொடூரமானவை என்றும் இதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச பொறிமுறையில் பதில் அளிக்க வேண்டிய பொறுப்புடையது என்றும் ஐ.நா கூறியது. வெளிநாட்டில் ஒரு முகத்தையும் உள் நாட்டில் இன்னொரு

முகத்தையும் காட்டும் மைத்திரி, வெளிநாட்டில் நல்ல பிள்ளையாக நடித்துவிட்டு, உள்நாட்டில் இனவாதப் பிள்ளையாக நடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார். 

உள்ளக விசாரணை ஒன்றின் மூலம் நீதியை வழங்குவதாகவும் 2019இற்குள் போர்க்குற்றத்திற்கு நீதியை வழங்குவதாகவும் மைத்திரி – ரணில் அரசு சர்வதேசத்திற்கு வாக்குறுதி அளித்தது.

இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாத்தில் ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடர் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், சிங்க அரசின் இனப்படுகொலைக்கு வெள்ளையடிக்கும் செயற்பாடுகளில் அரசு சில அமைப்புக்கள் ஊடாக முயன்று வருகின்றமையை காண முடிகின்றது. 

கொழும்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உலக தேசப்பாற்றாளர் இலங்கை மன்றம் என்ற அமைப்பு, இலங்கை அரசு போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதை திடமான சான்றுகள் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று மைத்திரி அரசை வலியுறுத்தியுள்ளது. போர்க்குற்றத்திற்காக ஒரு இராணுவத்தினரையும் தண்டிக்க விடமாட்டேன் என்று சொல்லி வருபவர் மைத்திரி. அத்துடன் போர்க்குற்றத்திற்காக மகிந்த தண்டிக்கப்பட்டிருப்பார் என்றும் வஅரை மின்சார் கதிரையிலிருந்து காப்பாற்றியதாகவும் மைத்திரி தற்பெருமை பேசிக் கொண்டிருப்பவர். 

இந்த நிலையில், போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் ஆகின்றது என்றும், இலங்கை அரசாங்கம், சர்வதேசத்திற்கு வாக்களித்தபடி, உண்மையையும் நீதியையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் என்றும் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதி காலம் கடந்து செல்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் கவலை வெளியிட்டுள்ளது. எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருக்கிறது. மைத்திரி – ரணில் கூட்டரசு எதற்கும் பயப்பிடுவதாகவோ, பதில் அளிப்பதாகவோ தெரியவில்லை. 

இந்த நிலையில், இனப்படுகொலையை குற்றத்தை மறைத்துவிடலாம் என்று கனவு காண்கிறது சிங்கள அரசு.

சிங்கள அரசு இழைத்த போர்க்குற்றம் உலகத்திற்கே வெளியானவை. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை வடக்கு மாகாண சபை உலகிற்கு உரைத்துள்ளது. அத்துடன் சர்வதேச சமூகமே இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை அறியும். அதனை எடுத்துரைக்காமல், சிங்கள அரசை காப்பாற்றுகிறது தமிழ் தலைமை.
ஆனால் தமிழீழ மக்கள் இதிலி’ருந்து பின்வாங்க முடியாது.

இனப்படுகொலைக்கான நீதியில்தான் ஈழத் தமிழ் இனத்தின் வாழ்வு தங்கியுள்ளது. ஈழத்தின் இளம் தலைமுறையும், புலம்பெயர் தலைமுறையும் இதற்காக உற்சாகமாக, நுட்பமாக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.சிங்கள அரசு போர்க்குற்றம் செய்யவில்லையாம். ஆம். சிங்கள அரசு செய்தது மோசமான இனப்படுகொலை. அதனை நிரூபிப்போம். அதற்கான நீதியை வென்று நிலைநாட்டுவோம். 


ஆசிரியர், 25.01.2019

Leave A Reply

Your email address will not be published.