பாமகவுடன் கூட்டு சேர நினைக்கும் எடப்பாடி ; சீற்றம் காட்டிய சி.வி சண்முகம்.!

0

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அணி சேர தொடங்கிவிட்டன நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சிகள். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக, இஸ்லாமிய கட்சிகள் ஆகியவை உள்ள நிலையில், இந்த அணிக்கு மாற்றாக வலுவானதோர் மாற்று அணியை அமைக்க முயற்சிக்கிறது பாஜகவின் டெல்லி தலைமை.

மேற்காண் முயற்சியை செயற்படுத்தும் விதத்திலேயே அதிமுக தவிர்த்து வட மற்றும் தென் மாவட்டங்களில் சாதி செல்வாக்குடைய பாமக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேற்கூறிய கட்சிகளுடன் பாஜக கூட்டு அமைப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், பாமக, தேமுதிகவுடனான கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் சீற்றம் காட்டியிருக்கிறார் சி.வி சண்முகம் என்கின்றன அதிமுகவின் உயர்மட்ட வட்டாரங்கள்.

பாமக நிறுவனர் ராமதாஸுடன், சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு எப்போதும் இணக்கமான போக்கு இருந்ததில்லை. காரணம், பாமகவினரால் சி.வி சண்முகத்தின் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது தான். இருவருமே வன்னியர் சமூகத்தினை சார்ந்தவர்கள் என்ற போதிலும், தான் மட்டுமே சமுதாயத்தின் அடையாளம் என செயல்படும் ராமதாஸின் செயல்பாடுகளை ரசிக்காத சி.வி சமீபத்தில் வன்னியர் நல வாரியம், ராமசாமி படையாட்சியாருக்கு மணி மண்டபம் தொடர்ச்சியாக வன்னியர் சமூகத்தின் கோரிக்கைகள் பலவற்றை தனது செல்வாக்கு பயன்படுத்தி நிறைவேற்றிவைத்தார்.

மேலும், நீண்ட நாள் கோரிக்கையான கள்ளக்குறிச்சி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதிலும் சி.வியின் செயல்பாடு அதிகம். இப்படி தொடர்ச்சியாக நாம் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளை செய்துவைத்திருக்க கூட்டணி என்ற பெயரில் பாமகவினர் குறிப்பிட்ட தொகுதிகளை கேட்பார்கள். அதெல்லாம் சரிப்படாது. வடமாவட்டங்களில் என்னை மீறி தொகுதி பங்கீடு நடைபெற்றால் நிலைமை விபரீதமாகும் என எடப்பாடியை, சண்முகம் எச்சரித்ததன் காரணமாக பாமகவுடனான பேச்சுவார்த்தையை தற்போதைக்கு தள்ளிவைத்துள்ளதாம் அதிமுக தலைமை.

Leave A Reply

Your email address will not be published.