மட்டக்களப்பு மாணவியின் மரணம் தொடர்பில் வெளியாகிய திடுக்கிடும் தகவல்கள்?

0

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்களது வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மரணமடைந்த மாணவியான வசந்தராஜா தேவயானியின் தாயாரான வசந்தராஜா மல்லிகாதேவியே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மரப்பாளம் கிராமத்தை சேர்ந்த வசந்தராஜா தேவயானி (18 வயது ) என்ற மாணவி கடந்த 30.10.2018 அன்று மடக்களப்பு கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சடலம் மீட்க்கப்பட்டு 85 நாட்கள் கடந்துள்ள நிலையில் தங்களது மகளின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மகள் கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டதை வைத்து அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்று சொல்லமுடியாது எனவும் தனது மகளின் மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுவதற்கான காரணங்கள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

மட்டக்களப்பு மரப்பாளம் கிராமத்தை சேர்ந்த வசந்தராஜா மல்லிகாதேவி அவர்களின் நான்காவது மகள் வசந்தராஜா தேவயானி (18 வயது ) என்ற மாணவி கரடியணாறு மாவலியாறு பாடசாலையில் இருந்து மேற்படிப்புக்காக மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகா வித்தியாலயத்திற்கு சென்றுள்ளார்.

தங்களது வாழ்வாதரத்திற்காக கணவர் வயல் காவலுக்கும் மனைவி சந்தையில் மரக்கறி வியாபாரத்திலும் ஈடுபட்டுவரும் ஒரு ஏழைக்குடும்பம் குடும்பத்தில் 06 பிள்ளைகள் ஆண்பிள்ளை ஒன்று மட்டக்களப்பு மத்திய கல்லுரியில் மருத்துவத்துரையில் கல்விபயின்று வைத்தியதுரைக்கு தெரிவாகியுள்ளார். அவரது தங்கையான வசந்தராஜா தேவயானி மரணமடைந்தவர்.

தனது பிள்ளைகளை எப்படியாவது படிக்கவைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்தாலும் சிலரது உதவியுடன் தங்களது பிள்ளைகளை மட்டக்களப்பு நகர்புறத்துக்கு அனுப்பி படிப்பித்துள்ளார் வசந்தராஜா மல்லிகாதேவி.

அங்கு உயர்தரத்தில் வணிகக்கல்வி பாடம் கற்றுவந்த மாணவி சிறிது காலம் விடுதியில் தங்கி இருந்து படித்துவந்துள்ளார். பின்னர் பாடசாலை விடுதியில் தங்கி படிக்க தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி தனது தாயின் பெண் தோழி ஒருவரின் நவக்குடாவில் உள்ள வீட்டில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார். இன்நிலையிலேயே தனது மகள் காணாமல் போனதாக மாணவி தங்கியிருந்து படித்த வீட்டுக்காரர்களால் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு மறுநாள் காலை 30.10.2018 அன்று மடக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவியின் மரணம் தொடர்பாக வைத்தியசாலை மற்றும் போலீசாரால் இதுவரை எந்த அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை எனவும் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மரணமடைந்த பிள்ளையின் குடும்பத்தினர் ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தி கருத்து தெரிவித்துள்ளனர்.

அதில் அவர்கள் பிள்ளையின் மரணம் தொடர்பாக தங்களுக்கு உள்ள சந்தேகங்களை தெரிவித்துள்ளனர்.

அதன் பிரகாரம் தங்களது மகளின் சடலம் வாவியில் இருந்து மீட்கப்படடபோது பிள்ளையின் நாக்கு வெளியே நீண்டு இருந்ததாகவும் தண்ணீரில் மூழ்கி மரணமடைந்த ஒருவரின் நாக்கு வாய்க்கு வெளியே நீண்டிருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றும் அத்துடன் தங்களது மகளின் உடலில் கீறல்கள் சிறு சிறு காயங்கள் இருந்ததுடன் அவர் அணிந்திருந்த உடை அவளுடையது இல்லையென்றும் அவளிடம் அவ்வாறானதொரு உடை இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் பிள்ளை காணாமல் போனதாக கூறப்படும் திகதிகளில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதுடன் பிள்ளையிடம் இருந்த துவிச்சக்கர வண்டியை காணவில்லை எனவும் பிள்ளையுடைய உடமைகள் எதுவும் தங்களிடம் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்றும் கூறினர்.

பிள்ளை இறப்பதற்கு முன்னர் அவள் வசித்துவந்த வீட்டின் சுற்றத்தார் சொல்லும் கதைகளைக் கேட்டால் தங்களது மகளுக்கு ஏதோ நடந்துள்ளது என்பதை ஊகிக்க கூடியதாக உள்ளதாக கூறுகின்றனர்.

எது எவ்வாறு இருப்பினும் தங்களது மகளின் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை என்றும் அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் தனது பிள்ளையின் மரணம் குறித்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி பொலீஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

85 நாட்கள் கடந்துள்ள நிலையில் இது குறித்து பொலீசாரோ அல்லது வைத்தியசாலை நிர்வாகமோ கவனத்தில் எடுக்கவில்லை என்றும் தாங்கள் பல தடவைகள் வைத்திய சாலைக்கும் பொலீஸ் நிலையத்திற்குமாக அலைந்து திரிவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

எனவே இதுகுறித்து உரிய தரப்புக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களது மகள் எவ்வாறு மரணமடைந்தார் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.