மருந்து கொடுத்தும் கொன்றார்கள்.. கொடுக்காமலும் கொன்றார்கள் – சசி குடும்பத்தாரை குறி வைக்கும் திமுக.!

0

மகத்தில் பிறந்தார் ஜகம் ஆள்வார் என்ற சொல்லாடல் யாருக்கு பொருந்துமோ இல்லையோ மறைந்த அதிமுகவின் தலைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு நூறு சதமானம் பொருந்தும். ஜெயா வெளிப்படையாக தமிழக முதல்வராக மாநில அரசு இயந்திரத்தை இயக்கி வந்த சூழலில், அவருக்கு பின்னிருந்து தமிழக ஆட்சி – அதிகாரம் முழுவதிலும் தனது கோர ஆதிக்கத்தை செலுத்திவந்தது ஒரு குடும்பம். அந்த குடும்பம் வேறு யாருடையதும் அல்ல, ஜெயாவின் வாயாலேயே தனது உடன்பிறவா சகோதரி என அறிவிக்கப்பட்ட சசிகலாவுடையதுதான்.

ஜெயாவுக்கு ஜோதிடம் உள்ளிட்டவற்றில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கையை அறிந்துகொண்ட சசிகலா, அதை பெரிய விருட்சமாக வளர்த்தெடுக்க தொடங்கினார். அப்படி ஜெயாவின் ஜாதகம் புகழ் பெற்ற ஜோதிடர்களால் ஆராயப்பட்டபோது ‘பாபாஜி’ பத்திரிகை ஆசிரியர் லெட்சுமண் தாஸ், ஜெயாவின் ஜாதகத்தை பார்த்துவிட்டு பின்னாளில் ஆட்சி – அதிகாரத்தில் கோலோச்சுவார் என கூறியதுடன், ஜெயாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து உண்டு எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த லெட்சுமண் தாஸ் தான் ராஜீவ் காந்தி இன்னும் 30 நாட்களில் இறந்துபோவார் என முன்பே கணித்து சொன்னவர் என்பது கூடுதல் தகவல். அப்போது தனக்கு ஒரு பெண்ணால் ஆபத்து நேரக்கூடும் என்றதை கேட்டவுடன், அப்போதைய சூழல்களை மனதில் கொண்டு ஜானகியம்மாள் தான் அந்த பெண் என கருதியிருந்தார் ஜெ.

சரி, இப்போது ஏன் இதெல்லாம் என்கிறீர்களா? காரணம் உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜெயா மரண விவகாரத்தை கையிலெடுத்துள்ள திமுக, தனது நாளிதழில் மேற்கண்ட வரிகளை குறிப்பிட்டுள்ளது. “மருந்து கொடுத்ததும் கொன்றார்கள் ; கொடுக்காமலும் கொன்றார்கள். தீர்த்துக்கட்ட யாகம் செய்தார்கள். விசாரணை அடுப்பு பற்றவைக்கப்பட்டால் அனைவரும் சிக்குவார்கள்” என சசி குடும்பத்தை குறி வைத்து திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும். தொடர்புடையோர் தண்டனைக்குள்ளாவார்கள் என வெளிப்படையாக அறிவித்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை விமர்சித்துபோல கருதிக்கொண்டு ஸ்டாலினை, தினகரன் ஏசியதால் அதிருப்தியடைந்த திமுக சசி தரப்பை குறி வைக்க தொடங்கியுள்ளதை திமுகவின் மேற்கண்ட நகர்வுகள் வெளிக்காட்ட தொடங்கியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.