மோடியுடன் ஜோடி போடப்போவது, டிடிவி தினகரனா, எடப்பாடியா?

0
மோடியுடன் ஜோடி போடப்போவது, டிடிவி தினகரனா, எடப்பாடியா?

மோடியுடன் வரும் தேர்தலில் கைகோக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் யார் பிரதமர், எந்தக் கூட்டணிக்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என்று தேசம் முழுவதும் விவாதம் சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த தேர்தலுக்கு முன்னால், அ.தி.மு.க – அ.ம.மு.க. இணைப்புக்கு வாய்ப்புள்ளதா என்பதே ‘ஹாட் டாபிக்’ ஆக அனல் பறத்திக் கொண்டிருக்கிறது. 

ஜல்லிக்கட்டை ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும், அரசியலில் தனக்கு அடங்காத காளைகளை எப்படி அடக்குவது என்ற மன ஓட்டத்தில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருந்து கொண்டிருக்கிறார். ‘கொடநாடு வீடியோ கொடுக்கும் குடைச்சல்’, ‘தலைக்கு மேலே தொங்கும் ஊழல் வழக்குகள்’, ‘கூட்டணிக்கு பி.ஜே.பி. கொடுக்கும் நெருக்கடிகள்’ என அவரைக் கொதிநிலையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசியல் சூழ்நிலை.

ஜெயலலிதா இருந்தவரை, அவர் சொல்வதே கட்சியில் சட்டம், வேதம் எல்லாமுமாக இருந்தது. இப்போது அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆளுக்கு ஆள் போட்டி போட்டுக்கொண்டு பேட்டி கொடுத்து, ‘பேட்ட மகராஜா’க்களாக தங்களைக் காட்டிக்கொள்ள முனைகின்றனர். ஓ.பி.எஸ்., ஓரமாக நின்று கொண்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.,வுக்குள் உச்சக்கட்ட குழப்பம் கும்மியடிப்பதை, பி.ஜே.பி. ரகசியமாக ரசித்துக் கொண்டிருக்கிறது. 

லேட்டஸ்ட் அப்டேட்

பிரேசிலின் பெருந்துயர்! – அணை உடைந்த விபத்தில் 40 பேர் பலி; 300 பேர் மாயம்

2 hour’s ago

`அப்பா, அம்மாவைப் பார்க்கப் பிடிக்கல!’ – 159 விமானப் பயணிகளைக் கதிகலங்க வைத்த மாணவன்

2 hour’s ago

`இங்குக் கலைகள் எல்லோருக்குமானவை !’ – ஒரே மேடையில் அரங்கேறிய பறையும் பரதமும்…

3 hour’s ago

மோடி - பி.ஜே.பி. கூட்டணியில் எடப்பாடி, தினகரன்

இத்தகைய சூழ்நிலையில், கட்சியை ஒருங்கிணைக்கும் சக்தி, டி.டி.வி. தினகரனுக்கே இருக்கிறது என்ற பரப்புரை, மறுபடியும் வலுப்பெற்றுள்ளது. முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், நிர்வாகம் மற்றும் காவல்துறை தலைவர்கள் அனைவரும் இருக்கும் சென்னையில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், எல்லோருக்கும் ‘டேக்கா’ கொடுத்து, மக்களுக்கு ‘டோக்கன்’ கொடுத்து வெற்றிக்கனியைப் பறித்தவர் டி.டி.வி.தினகரன். அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தால், எல்லோரையும் வழிக்குக் கொண்டு வந்து, பி.ஜே.பி-யையும் சமாளிப்பார் என்கிற ரீதியில், சமூக ஊடகங்கள் வழியாக, சில விஷயங்கள் பகிரப்படுகின்றன.

இந்தச் சூழ்நிலையில், அ.தி.மு.க.,வுடன் அ.ம.மு.க., இணையுமா அல்லது தனியாக பி.ஜே.பி-யுடன் கைகோக்குமா போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன. கூட்டணி விஷயத்தில், டி.டி.வி.தினகரனின் எதிர்பார்ப்பும், முயற்சியும் எப்படி இருக்கின்றன என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்…

‘‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன், அந்த 18 பேரில் ஒருவர் முதல்வர் பதவியேற்க வேண்டும். ஆறு அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்பதுதான் இரு கட்சிகள் இணைப்புக்கு, தினகரன் வைத்த முக்கிய நிபந்தனையாக இருந்தது. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியதே சசிகலாதான். அவர்தான், தினகரனையும் துணைப் பொதுச் செயலாளராக அறிவித்தார். அப்படியிருக்கையில், அவர் மீண்டும் கட்சிக்குள் வருவதை எடப்பாடி பழனிச்சாமி எக்காரணத்துக்காகவும் எதிர்க்க மாட்டார். 

எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்பட்டதில், பாதிக்கப்பட்ட 18 பேரில், ஏற்கெனவே செந்தில் பாலாஜி, கட்சி மாறி விட்ட நிலையில், தங்கத் தமிழ்ச்செல்வன் உட்பட மற்ற 17 பேருமே கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது, மீண்டும் ‘சீட்’ கிடைக்காது. ‘கிடைத்தாலும் ஜெயிப்பது கஷ்டம்’ என்று அவர்கள் அறிந்துள்ளனர். ஆனாலும், பி.ஜே.பி. நினைத்தால் கட்சிகளை இணைப்பது சாத்தியம்; அப்போது தங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கிடைக்குமென்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

தி.மு.க-வில் செந்தில் பாலாஜி

துணை சபாநாயகர் தம்பிதுரை, கடுமையாக பி.ஜே.பி-யை விமர்சித்தாலும், முதல்வர், துணை முதல்வர் யாருமே அதுபற்றி வாய் திறப்பதில்லை. இருவருமே, ‘பூசுன மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்’ என்பதைப் போல, பி.ஜே.பி-யுடன் கூட்டணியும் வேண்டாம்; ஆனால், அவர்களின் ஆதரவும் வேண்டும் என்கிற நிலையில் உள்ளனர். இதை பி.ஜே.பி தலைமை விரும்பவில்லை. அவர்கள் இரு கட்சிகளையும் இணைத்து, ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுடன் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். 

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜெயலலிதா விரும்பிய படி, மத்திய அரசு செயல்படுவதால், பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க., கூட்டணி வைக்க வேண்டும்’ என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். பி.ஜே.பி. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ராம்தாஸ் அத்வாலே, ‘பி.ஜே.பி-யுடன் அ.ம.மு.க கூட்டணி சேர்ந்தால், தினகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும். எனவே, அ.ம.மு.க, அ.தி.மு.க, பி.ஜே.பி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும்’  என்று பேசியுள்ளார். 

தற்போதுள்ள அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்தால், கட்சி வாக்குகள் பிரிந்து, கூட்டணிக்கே தோல்வி கிடைக்குமென்று பி.ஜே.பி-க்கு உளவு அறிக்கைகள் சொல்லியிருக்கின்றன. அதனால்தான், கட்சிகள் இணைப்பில், இரு கட்சியினரை விட, பிஜேபி ஆர்வமாய் உள்ளது. அதையே இந்த அமைச்சர்களின் பேச்சு வெளிப்படுத்துகிறது. ஆனால், இணைப்புக்கு தினகரன் வைக்கும் ஒரே கோரிக்கை, ‘தான் முதல்வராக வேண்டும்’ என்பது தான்.

மோடியுடன் கூட்டணி சேர்வாரா தினகரன்

முன்பு, ‘18 பேரில் ஒருவரை முதல்வராக்க வேண்டும்’ என்றார். அதற்கு இப்போது வாய்ப்பு இல்லை என்பதால், தானே முதல்வராகி, இடைத்தேர்தலில் தனது ஆதரவாளர்களை மீண்டும் நிறுத்த வேண்டுமென்று நினைத்துள்ளார். அதற்கு வாய்ப்பில்லை எனில், ஆட்சியைக் கலைப்பதற்கான முயற்சிகளையே அவர் தொடர்வார். அதற்காக பிஜேபியுடன் எந்தவிதமான சமாதானத்துக்கும் அவர் தயாராக இருக்கிறார். அதனால், அ.தி.மு.க.,வுடன் இணைப்பு இல்லாவிட்டால், பிஜேபியுடன் அ.ம.மு.க.கூட்டணி உறுதியாயிருக்கும்’’ என்றார்கள் அவர்கள். 

பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தால், தங்களது கட்சிக்குத் தோல்வி என்று கருதும் அ.தி.மு.க., தலைவர்கள், பிஜேபி இல்லாமல் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், த.மா.கா., போன்ற கட்சிகளைச் சேர்த்து, தி.மு.க., கூட்டணியை எதிர்கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளனர். பி.ஜே.பி தனித்து விடப்படுமென்று நினைத்தே அப்படிப் பேசுகின்றனர். ஆனால், இப்போது அ.ம.மு.க.,வுடன் பி.ஜே.பி. கூட்டணி வைக்கும்பட்சத்தில், தங்களுக்கு எதிரான எல்லா வழக்குகளையும், விஷயங்களையும் தோண்டித்துருவி, ஆட்சிக்கு முடிவு கட்டி விடுவர் என்ற குழப்பமும் அ.தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. 

மோடியோடு எடப்பாடி ஜோடி போடுவாரா, டி.டி.வி.,க்கு விட்டுக் கொடுத்து, இருப்பதைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறாரா…எல்லாமே இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதானே தீர வேண்டும்!

Leave A Reply

Your email address will not be published.