யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வந்த பெண்ணுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு !

0

யாழ்ப்பாணத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க நகையைத்திருடிய குற்றச்சாட்டில் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டார்.

அவர், நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் சங்கிலி அறுத்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது.

அதனால் வைத்தியசாலையில் நோயாளியிடம் திருடிய குற்றச்சாட்டு வழக்கில் பிணை வழங்கிய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், நல்லூர் ஆலயத்தில் பெண்ணிடம் சங்கிலியை கொள்ளையடித்த வழக்கில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் தங்க நகைகள் களவாடப்படுவது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

இது தொடர்பில் வைத்திய சாலை வளாகத்தினுள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களின் (சி.சி.ரி.வி) உதவியுடன் நகைகளை திருடி வந்த பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டார்.

அவரை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் துணையுடன் வைத்தியசாலை நிர்வாகம் பிடித்து காணொளி ஆதாரத்துடன் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வைத்தியசாலைக்கு சென்ற வயோதிபப் பெண்ணொருவரிடம் இருந்து சங்கிலி ஒன்று களவாடப்பட்டு உள்ளது. அது தொடர்பில் அந்த வயோதிபப் பெண் வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிட்டார்.

அதனை அடுத்து கண்காணிப்பு கமராக்களை பரிசோதித்த போது, வைத்தியசாலையில் முன்னர் நகைகளை திருடிய குற்றசாட்டில் தம்மால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்ணே மீண்டும் திருட்டில் ஈடுபடுவதனை நிர்வாகத்தினர் கண்டறிந்தனர். அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்தனர்.

அந்த காணொளியை ஆராய்ந்த யாழ்ப்பாணம் பொலிஸார் அந்தப் பெண்ணை முல்லைத்தீவில் வைத்து கைது செய்தனர். அத்துடன், மேலும் இரண்டு பெண்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

அந்தப் பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண்ணொருவரிடம் சங்கிலி அறுத்ததாக தெரிவித்தார்.

குறித்த சங்கிலியை நகை வேலை செய்பவரிடம் விற்பனை செய்ததையும் சந்தேகநபர் விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நகை வேலை செய்பவரை அழைத்து விசாரணை செய்த பொலிஸார், சந்தேகநபரால் விற்பனை செய்யப்பட்ட சங்கிலி உருக்கப்பட்டு தங்கக் கட்டியாக மீட்டனர். அதனால் நகை வேலை செய்பவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.