ஸ்ரீலங்கா- கட்டுநாயக்கவில் அமெரிக்காவின் கப்பலின் தற்காலிக தளம்

0

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்ரெனிஸ்  விமானந்தாங்கி கப்பலுக்கு சிறிலங்காவில் உள்ள அமெரிக்க கடற்படையின் தற்காலிக விநியோக மையத்தில் இருந்து, பொருள்களின் விநியோகம் இடம்பெறுவதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பல்களுக்குத் தேவையான விநியோகங்களை சிறிலங்காவின் ஊடாக மேற்கொள்வதற்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு இணக்கப்பாடு நடைமுறையில் இருந்து வருகிறது.

இதற்கமைய ஏற்கனவே கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் திருகோணமலை ஊடாகவும், டிசெம்பரில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகவும் அமெரிக்க போர்க்கப்பல்களுக்கான விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது மூன்றாவது முறையாக, யுஎஸ்எஸ். ஜோன் சி ஸ்ரெனிஸ்  விமானந்தாங்கி கப்பலுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 21ஆம் நாள் ஆரம்பித்த இந்த விநியோக நடவடிக்கை, எதிர்வரும், 29ஆம் நாள் வரை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிறிலங்காவுக்கு 25 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படையின் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி, பல்வேறு வகையான ஆயுதங்கள் இல்லாத பொருட்களை, ஆழ்கடலில் தரித்து நிற்கும் அமெரிக்க விமானந்தாங்கி கப்பலுக்கு ஏற்றிச் செல்லவுள்ளன.

ஏற்றிச் செல்லப்படும் பொருட்களில் அமெரிக்க படையினருக்கான கடிதங்கள், கடதாசிப் பொருட்கள், உதிரிப் பாகங்கள், கருவிகள், மற்றும் ஏனைய பொருட்கள் அடங்கியுள்ளன.

இந்த முயற்சியுடன் தொடர்புடைய சரக்கு, இராணுவ கருவிகள்  அல்லது நபர்கள், விநியோக நடவடிக்கைகள் நிறைவு பெற்ற பின்னர் சிறிலங்காவில் இருக்கமாட்டார்கள் என்றும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.