“ராமர் அண்ணாதான் என் ஜோடினு சொன்னதும் தயங்கினேன். ஆனா…!?” ‘ஜோடி’ ரேமா

0

வெ.வித்யா காயத்ரி வெ.வித்யா காயத்ரி Follow
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `ஜோடி’ டான்ஸ் நிகழ்ச்சியில் ராமருடன் சேர்ந்து தூள் கிளப்பி வருபவர், ரேமா. கிளாசிக்கல் டான்சரான ரேமாவுக்கும், ராமருக்கும் இதுவே முதல் நடன மேடை. ஆனால், கலக்கல் பர்ஃபார்மென்ஸ் கொடுத்துவரும் இந்த ஜோடி பைனலுக்குத் தேர்வாகியிருக்கிறார்கள். அவர்களிடம் பேசினோம்.

“நான் கிளாசிக்கல் டான்ஸர். ஆரம்பத்துல ராமர் அண்ணாகூடதான் ஆடப் போறேன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் யோசிச்சேன். நான் இதுக்கு முன்னாடி நிறைய நிகழ்ச்சிகளில் ஆடியிருக்கேன், ஆனா, அவருக்கு இது புது மேடை. எப்படி சாத்தியம் ஆகும்னு தயங்கினேன். அவர் ரொம்ப பிஸி. போட்டிக்கு முதல் நாள் சாயங்காலம் தான் பிராக்டீஸுக்கு வந்தார். ஆனா, பிராக்டீஸில் மாஸ்டர் அவருக்குச் சொல்லிக் கொடுத்த ஸ்டெப்பை அப்படியே ஆடிக் காட்டினார். இது கஷ்டமா இருக்கு, இந்த ஸ்டெப் வேண்டாம் அப்படின்னு எதுவுமே அவர் சொல்லலை. அப்புறம்தான் எனக்கு ஒரு நம்பிக்கையே வந்துச்சு. ராமர் அண்ணா பயங்கரமான ஹார்டு ஒர்க்கர். அவர் அளவுக்கு யாராலும் கடினமா உழைக்க முடியாது.

ராமர் அண்ணா ரொம்ப எளிமையா இருப்பார். எனக்கும், அவருக்கும் இதுவரை எந்தப் பிரச்னையுமே வந்தது இல்ல. அவருக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்கன்னு கெத்துலாம் காட்டினதில்லை. எவ்வளவு மேலே போனாலும் ஆரம்பிச்ச இடத்தை அவர் மறக்கவே இல்லை. அவருடைய ஃபேமிலி பத்திதான் என்கிட்ட அடிக்கடி பேசுவார். `ஜோடி’ செட்டுல அவருடைய ஃபேமிலி வந்தப்போ ரொம்ப எமோஷனல் ஆகிட்டார். ராமர் அண்ணாவை எப்பவும் சிரிச்ச மாதிரி செட்டுல பார்த்துட்டு எமோஷனலா பார்க்க ரொம்பவே ஒரு மாதிரி இருந்துச்சு” என்றவரிடம் ஃபைனலுக்கு செலக்ட் ஆனது குறித்து கேட்டோம்.

“ஆரம்பத்துல ராமர் அண்ணா வந்து நின்னாலே அவருடைய ஃபேன்ஸ் கைதட்ட ஆரம்பிச்சிடுவாங்க. எல்லோரும் ரேமா நீ சூப்பராதான் டான்ஸ் ஆடுவ. ஆனா, ராமர் அண்ணா வந்து நின்னாலே அவருடைய ஃபேன்ஸ் எல்லோரும் கைதட்ட ஆரம்பிச்சிடுவாங்களேன்னு சொன்னாங்க. அதுக்கு அப்புறத்திலிருந்து அவரை ஆட வெச்சோம். அதுக்கு முன்னாடி வரைக்கும் அவருக்கு கம்மியாதான் ஸ்டெப்ஸ் இருக்கும். அப்படிச் சொல்றாங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா அவரை அதிகமா ஆட வைக்கணும்னு நினைச்சேன். இப்போ அவர் ஆடும்போது ராமர் சூப்பரா ஆடுறாருன்னு யாராச்சும் சொன்னாங்கன்னா நான் பயங்கர ஹாப்பி!

இப்போ கடைசியா கரகாட்டம், மயிலாட்டம்னு நம்ம கலையை ஒரே மேடையில் கொண்டு வரலாம்னு நினைச்சோம். நான் ஸ்கூல் படிக்கும்போது கரகம் ஆடியிருக்கேன். ஆனா, ராமர் அண்ணாவுக்குக் கரகம் ஆடுறது இதுதான் முதல் முறை. முதல் தடவை ஆடும்போதே கரகம் கீழே விழாம சூப்பரா ஆடிட்டாங்க. அதுக்காக நாங்க ரெண்டு நாள்தான் பிராக்டீஸ் பண்ணோம். ஸ்டேஜ்ல நாங்க பர்ஃபார்ம் பண்ணதைப் பார்த்துட்டு எல்லோரும் மிரண்டுடாங்க. அவ்வளவு நல்லா இருந்துச்சுன்னு பாராட்டினாங்க. எங்களை ஃபைனலுக்கும் தேர்ந்தெடுத்தாங்க. இதுக்கப்புறம் ஆடியன்ஸ்கிட்ட எதிர்பார்ப்பு அதிகமா இருக்கும். இப்போ எங்க கவனம் முழுக்க ஃபைனலில்தான் இருக்கு” என்றவரிடம் ஃபைனலுக்கு என்ன பிளான் எனக் கேட்டோம்.

ரேமா

“எங்களுக்கு மணி மாஸ்டர்தான் கொரியோகிராஃபர். அவர் ஸ்டெப்ஸ் எல்லாம் முடிவு செஞ்சிடுவார். நாங்க அதை பிராக்டீஸ் பண்ணுவோம். இப்போ ராமர் அண்ணா பிஸியா இருக்கார். நானும் ஷூட்டிங்கில் இருக்கிறதனால இன்னும் பிராக்டீஸ் ஆரம்பிக்கலை. ஃபைனலுக்கு இரண்டு நாளுக்கு முன்னாடி வழக்கம் போல பிராக்டீஸ் பண்ணுவோம்னு நினைக்கிறேன். எங்களுக்கு டைட்டில் வின் பண்ணணுங்குற எண்ணம்லா இல்ல. ராமர் – ரேமா என்டர்டெயினங் பர்ஃபார்மென்ஸ் கொடுப்பாங்கன்னு ஆடியன்ஸ் நினைக்கிறாங்க. அப்படி ஜாலியான ட்ரீட் ஆடியன்ஸூக்குக் கொடுக்கணுங்குறது மட்டும்தான் என் பிளான்”! என்றவரிடம் ஃபேமிலி குறித்துக் கேட்டோம்.

“என் அம்மாதான் முழுக்க, முழுக்க என் பலம். அவங்களுக்கு ஆக்ஸிடென்ட்டாகி கை உடைஞ்சப்போகூட என்கூட டான்ஸ் பிராக்டீஸுக்கு வந்து உட்கார்ந்திருந்தாங்க. உன்னால முடியுங்குற நம்பிக்கையை எப்பவும் கொடுத்துட்டே இருப்பாங்க. எங்க அம்மா பதினெட்டு வருஷமா டீச்சரா இருந்தாங்க. அவங்க புரொபஷனை எனக்காக விட்டுக் கொடுத்துட்டாங்க!” எனப் புன்னகைக்கிறார், ரேமா.

Leave A Reply

Your email address will not be published.