அடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்!

0

தீபச் செல்வனின் நடுகல்.

2009 முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் துவக்குகள் மவுனித்த பிறகு, வரலாற்றின் கரிய இருள் படர்ந்த பக்கங்களில் எழுதப்பட வேண்டிய இனப்படுகொலைகளுக்குப் பிறகு, மானுட விழுமியங்களின்பால் சர்வதேசச் சமூகம் காட்டிய அவமானகரமான பாராமுகத்திற்குப் பிறகு, போரும், இனப்படுகொலைகளும், பெருந்திரளான மக்களின் இடப்பெயர்வும் மக்களை அழைக்கழித்துச் சிதைத்த, தமிழினத்திற்கு எதிரான இன அழிப்பு என்பது அதன் வேறுபட்ட வடிவங்களில் இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கும் அதே வன்னிப்பரப்பில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது தீபச்செல்வனின் நடுகல்.

      சமகால ஈழ எழுத்தாளர்களில், குணா கவியழகன், தமிழ்நதி, அகரமுதல்வன், வாசு முருகவேல் உள்ளிட்ட பலர், தொடர்ந்து ஈழ விடுதலைப்போராட்டத்தின் பல்வேறு சித்திரங்களைத் தமிழ்ச்சமூகத்திற்கு அவர்களது எழுத்துகள் மூலமாக அறியச் செய்து வருகிறார்கள். பெரும்பாலான ஈழ எழுத்தாளர்கள் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்துவிட்ட நிலையில், தீபச்செல்வன் போரினால் பாதிக்கப்பட்ட அதே நிலத்தில் நின்று தொடர்ந்து செயல்படுவது இவர் மீதான, இவரது எழுத்துகள் மீதான தனித்த கவனத்தைக் கோருகிறது.

      ஒரு ஈழ இலக்கியப்பிரதியை, அது கூறும் வாழ்வை ஒரு இந்தியத் தமிழனாக புரிந்துகொள்வது என்பது முற்றிலும் வேறான ஒரு அனுபவமாகவே இருக்க முடியும். ஒரு கையாலாகாதவனின் கனத்த மனதுடனே இதை வாசிக்கவும், வாசித்துக் கடக்கவும் அவனால் முடியும். இங்குள்ள  தமிழனுக்கு விதிக்கப்பட்டதும் அதுதான். போலவே வானிலிருந்து வீசப்பட்ட இடைவிடாத குண்டு மழைக்கு ஊடே, வீழ்த்த முடியாததென, இயக்கம் சமாளித்துக்கொள்ளுமென, இயக்கம் பின் வாங்காதென ஈழ மக்கள் கருதியிருந்த, தமிழக மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட தகவல்களின் வழி கட்டமைக்கப்பட்டிருந்த ’கிளிநொச்சி’ வீழ்ந்த காலத்தில் நடந்த ஈழ மக்களின் இடப்பெயர்வு, அம்மக்களின் வாழ்வைச் சிதைத்துப் புரட்டிப் போட்ட துயரார்ந்த கதைகளை தீபச்செல்வனின் எழுத்துகளின் வழி படிப்பதும் அவ்வாறான மனநிலையைக் கொடுக்கக் கூடிய அனுபவம்தான்.

      வீரச்சாவடைந்த தமிழ்ப்போராளிகளின் நினைவுகளைச் சுமந்து நிற்கும் அவர்களது கல்லறைகளைக் கொண்ட ‘மாவீரர் துயிலும் இல்லமாகவும், அவர்களது சிறு வயதில் எடுக்கப்பட்டதாகவோ அல்லது சமர்க்களத்தில் மரணமடைந்த பிறகு இயக்கத்தின் வாயிலாக அவர்தம் குடும்பத்தினருக்குக் கையளிக்கப்பட்டதாகவோ உள்ள புகைப்படங்களாகவும், மரணித்த மாவீரர்களின் உடமைகளாகவும், அவர்கள் வாழ்ந்த வீடுகளாகவும், இவை எதுவுமே எஞ்சியிராதவர்களின் உற்றாரிடத்திலே நினைவுகளாகவும், பிள்ளைகளைப் பெற்று போர்க்களத்தில் பலிகொடுத்த அன்னையர்களின் மீதமிருக்கும் கண்ணீராகவும் பல்வேறு வடிவங்களில் பண்டைய காலம்தொட்டே தமிழர்களின் நீத்தார் வழிபாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் ‘நடுகல்’ என்கிற உருவகமே இந்த நாவலின் தலைப்பாகவும், கதையின் மையச்சரடாகவும் உள்ளது.

      இறுதிப்போருக்கு முந்தைய காலம், கிளிநொச்சி வீழ்த்தப்படுதல், மக்களின் இடப்பெயர்வு, யுத்தத்தின் கோர முடிவு, முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களின் சகித்துக்கொள்ள முடியாத வாழ்க்கை, தான் கொன்றொழித்தவர்களின் ரட்சகனாகத் தன்னையே அறிவித்துக்கொள்ளும் இலங்கை அரசு மற்றும் இராணுவத்தினரின் போருக்குப் பின்னான அணுகுமுறை, தமிழினத்தின் அடையாளங்களை அழிக்க அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்கிற வரிசையிலான நிகழ்வுகள் நடுகல்லின் கதை மாந்தர்களின் நினைவுகளின் வழியாகவும் கதைசொல்லியின் வார்த்தைகளாகவும் முன்பின்னாக அலைவுறுகின்றன. போரின் ஆரம்பம், இடப்பெயர்வு ஆகியவற்றை ஆவணப்படுத்தியதோடு, போருக்குப் பின்னால் முகாம்களிலும், அவற்றுக்கு வெளியிலும் உள்ள மக்களின் மீது, உளவியல் அடிப்படையிலும், தனது  கடும் கண்காணிப்புகளோடு கூடிய கட்டுப்பாடுகளினாலும் சிங்கள இராணுவமும், அரசும் எவ்வாறு தொடர்ந்து இன அழிப்பின் வேறுபட்ட வடிவங்களை செயல்படுத்திக்கொண்டே இருக்கிறது என்பதை ஆவணப்படுத்திய விதத்தில்தான் நடுகல் தனித்து நிற்கிறது.

      குணா கவியழகனின் ‘கர்ப்ப நிலம்’  நாவலும் ஏறக்குறைய அதே காலகட்டத்தில் நிகழ்ந்த இடப்பெயர்வை விவரிப்பதுதான். குணா கவியழகன் அந்த இடப்பெயர்வை பரந்து பட்ட, ஒரு சமூகத்தின் இடப்பெயர்வாக விவரித்து எழுதியிருப்பார். தீபச்செல்வனின் நடுகல், ஒரு குடும்பத்தின், அவர்களது சிறிய வட்டத்தைச் சேர்ந்த மக்களின் இடப்பெயர்வை, அவர்களது பாடுகளை மிக நெருக்கமாக நின்று விவரிப்பதாக உள்ளது.

      மக்களையும் போரையும் புலிகள் எதிர்கொண்ட விதம், கிட்டத்தட்ட குடும்பத்தில் ஒருவரைக் களப்பலியாகக் கொடுத்திருக்கும் ஒரு சமூகம் அதன் பெருமிதங்களை விடாப்பிடியாகக் கைக்கொள்வது, வீரச்சாவடைந்தவர்களை நினைவு கூர்வதின் மூலம் அந்தப் பெருமிதங்களைத் தக்க வைத்துக்கொள்ளும் அவர்களது தன்முனைப்பு ஆகியவற்றையும், மாவீரர் தின வழிபாடுகளைத் தடுப்பது, மாவீரர் துயிலும் இல்லங்களைச் சிதைப்பது, தமிழர்களின் இன, மொழி, மத அடையாளங்களைச் சிங்கள மயமாக்குவது, தமிழர்களின் நினைவுகளிலிருந்தே அவர்களது கடந்த காலப் பெருமிதங்களை அழிப்பது, தமிழர்களின் ஒரே தேர்வாக ஒருங்கிணைந்த இலங்கையை நிலைநிறுத்தும் விதமான பிரச்சாரங்களை மேற்கொள்வது, உயிருக்கும், உடமைக்கும் பயந்து, தங்களுடைய தனிப்பட்ட சுயலாபங்களுக்காகவும் தங்களோடு அணுக்கமாக இருக்கும் தமிழர்களை இனங்கண்டு அவர்களை வைத்தே தமிழர்களை வெருட்டுவதுமாக போரின் போது நடந்த ‘இனப் படுகொலைகள்’ இப்போது எப்படி ‘இன அழிப்பு’ என்பதாக மாறிப்போயிருக்கிறது என்பதை மிக வெளிப்படையாகவே நமக்குக் காட்டுகிறது நடுகல் நமக்களிக்கும் சித்திரம்.

      பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் திரளைப் போருக்குத் தின்னக்கொடுத்த எண்ணற்ற அன்னையர்களின் கண்ணீர்த்துளிகள்தான் நடுகல் நாவலின் ஆன்மாவாக இருக்கிறது. ஒரே பிள்ளையைப் பறி கொடுத்தவளும், நான்கு பெற்று நான்கையும் ஈழத்திற்காய் ஈந்தவளும் தாம் பறிகொடுத்த சிசுக்களின் நினைவுகளைத் தங்களது மனதுக்குள் நடுகல்லாய் நிறுத்திப் பூசை செய்கிறார்கள். 

      சிறுவர்களை இயக்கத்தில் சேர்த்துக்கொள்வது, போர் முனைகளின் பொதுமக்களை இயக்கம் தங்களுக்குக் கேடயமாகப் பயன்படுத்தியது, எனக் காலம் காலமாக இயக்கத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, பெரும்பாலான ஈழ எழுத்தாளர்கள் மறைமுகமாகவோ இல்லை நேரடியாகவோ தங்களது படைப்புகளில் பதிலளித்துவிடுகிறார்கள். நடுகல்லிலும் அது உண்டு. தன்னைப்பெற்றவளாலும், இயக்கத்தாலும் தொடர்ந்து மறுக்கப்பட்டும் விடாப்பிடியாக நின்று இயக்கத்தில் இணைந்து, கள முனையை தன்னார்வத்துடன் தேர்ந்தெடுத்து விரையும் இளைஞன், யுத்தம் ஆரம்பித்து குண்டு வீச்சு தொடங்கியவுடன் பொதுமக்களை இடம்பெயரச்சொல்லி அறிவித்தபடியே களமுனை நோக்கி முன்னேறிச்செல்லும் புலிகள், அமைதிக்காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் சரியான முறையில் நடந்த நீதி பரிபாலனம், அவர்களது சிறப்பான, கட்டுப்பாடான ஆட்சி முறை இந்த சித்திரங்கள் பிற சமகால ஈழப் படைப்புகள் போலவே தீபச்செல்வனின் இந்த நாவலிலும் விரவிக்கிடக்கின்றன.

      அறிந்திராத நிலத்தின் கதை என்பதாலும், காலத்தில் முன் பின்னாக நினைவோடையாக எழுதப்பட்டிருப்பதாலும், கதையின் சம்பவங்களைக் கோர்வையாக்கிக் கொள்வதற்கும், கதைக்குள்ளே ஆழ்வதற்கும் ஆரம்பத்தில் சற்றுச் சிரமமான வாசிப்பைக் கோருவதாக இருந்தாலும், கதையின் மையச் சரடைத் தொட்டுவிட்டோமேயானால், அதன் பிறகு நாமும் கதை மாந்தர்களோடு வன்னிப்பரப்பில் சேர்ந்தலையத் தொடங்கிவிடுகிறோம்.

      போர் என்கிற பெயரில், சர்வ தேசச் சமூகத்தின் கண் முன்னே ஒரு இனப்படுகொலை நடந்து முடிந்த பின்னும், தமிழ் இனத்தின் மீது, தமிழர் அடையாளங்களின் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் உளவியல், அரசியல் தாக்குதல்களை அந்தக் களத்திலேயே நின்று ஆவணப்படுத்தியிருப்பதோடு, தமிழீழம் என்கிற கனவு, தமிழீழத்திற்காக நடந்த போராட்டங்கள், வீரச்சாவடைந்தமாவீரர்கள், அவர்களது நினைவுகள் ஆகியவை மீண்டும் எந்த விதத்திலும் தமிழ் மக்களால் நினைவு கூறப்படுவதைத் தடுக்கநினைக்கும் சிங்கள அரசும், இராணுவமும், மக்கள் மனங்களில் நிலைபெற்று  வாழும் மாவீரர்களை எதைக் கொண்டும் அழிக்க முடியாது என்பதையும், புலிகளின் மேல் சிங்களர்களது ஆழ்மனம் இன்னமும் கொண்டிருக்கும் அச்சம், அவர்களுக்குப் புலிகளைத் தொடர்ந்து நினைவுபடுத்தும் என்பதையும், அந்த அச்சத்தைத் தங்களது தோல்வியாக ஒப்புக்கொள்ளும் மனமின்றி அவர்கள் நிற்பதையும் சொல்லும் இந்த நாவல், கடந்த பத்தாண்டு கால ஈழ மக்களின் வாழ்வை அவர்களுக்கு அணுக்கமாக நின்று பதிவு செய்த ஆவணமாக இருக்கிறது.

      விடுதலைப்போரில் தோல்வியடைந்திருந்தாலும், பேரழிவைச் சந்தித்திருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தன் உதிரத்தில் ஒரு பகுதியை போர்க்களத்தில் சிந்தியிருப்பவனாகவும், ஒவ்வொரு குடும்பமும் தன்னில் ஒருவரையாவது வீரச்சாவடைந்தவராகக் கொண்டிருப்பதும், இனப்படுகொலையின் மிச்சங்களாகவே இருக்கும் இப்போதைய தலைமுறை, இந்தச் சீரழிவுகள் எல்லாவற்றையும் கேட்டு வளரும் தன் அடுத்த தலைமுறைக்கு, தனக்கான பங்காக ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றிவிடவே செய்யும். அந்த அணையா தீபத்தின் ஒரு சுடர்தான் தீபச்செல்வனின் “நடுகல்”

இளங்கோவன் முத்தையா

நன்றி – தினக்குரல்

Leave A Reply

Your email address will not be published.