இறுதியானது கூட்டணி! – பா.ம.க – அ.தி.மு.க இடையே ஒப்பந்தம் கையெழுத்து

0

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்தக் கூட்டணியில் பா.ம.க, தே.மு.தி.க, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அவை எப்போது இறுதிவடிவம் பெறும், எப்போது தொகுதிகள் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படாமலே இருந்தது.

ராமதாஸ் - எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை அக்கட்சி வட்டாரங்களும் மறுக்கவில்லை. அவருக்கு வரவேற்பு கொடுக்கும் வேலைகளில் அக்கட்சியினர் தீவிரமாக வேலை பார்த்து வந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது. மும்பையில் இருந்து அவர் தனி விமானத்தில் டெல்லி சென்றார். இருப்பினும் பியூஷ் கோயல் இன்று மதியம் சென்னை வரவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில் அ.தி.மு.க தலைவர்கள் தற்போது குவிந்துள்ளனர். முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி மற்றும் பல நிர்வாகிகள்  கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வந்துள்ளனர். அவர்களை அடுத்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரின் மகன் அன்புமணி ராமதாஸும் கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதுவரை பா.ம.க அ.தி.மு.க கூட்டணியில் சேரப்போகிறது எனக் கூறிவந்தாலும் அதிகாரபூர்வமாக யாரும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் இரு கட்சிகளும் தற்போது வெளிப்படையாகக் கூட்டணி குறித்துப் பேசி வருகின்றனர். 

கூட்டணி குறித்து பேசியதும் இருகட்சிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸும் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளரும், பா.ம.க சார்பில் ராமதாஸும், அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்டோரும் கையெழுத்திட்டனர். இந்த சந்திப்பும் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தனத்தை அடுத்து இன்னும் சிறிது நேரத்தில் எத்தனை தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இரு கட்சி உறுப்பினர்களும் அறிவிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.