எம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி!!

0

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், என்றைக்குமே அழிக்கமுடியாத அங்கமாகிப்போன பல தமிழ் நாட்டுத் தமிழர்களில் முக்கியமானவர்: திரு எம்.ஜீ.ஆர்.

ஈழத் தமிழர்களின் மேல் அன்பும், தலைவர் பிரபாகரன் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கையும் கொண்டு செயற்பட்டவர்தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ‘மக்கள் திலகம்’ எம்.ஜீ.ஆர். அவர்கள்.

ஈழத்தில் பிறந்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அவர் வழங்கிய ஆதரவு என்பது வரலாற்றில் என்றைக்குமே அழிக்க முடியாதது.

ஓரங்கட்டப்பட்ட புலிகள்:

தமிழ்நாட்டைத் தளமாகக்கொண்டு ஈழத் தமிழ் அமைப்புகள் தமது ஈழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்த காலகட்டங்களில் ஆயுதக்கொள்வனவு என்பது ஒன்றும் இலகுவான காரியமாக இருக்கவில்லை. அதிலும் குறிப்பாக இரண்டு முக்கிய விடுதலை இயக்கங்களைப் பொறுத்தவரையில், ஆயுதக்கொள்வனவு என்கின்ற விடயம் மிகவும் கஷ்டமான ஒன்றாகவே இருந்தது.

அந்த இரண்டு அமைப்புக்களில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகள். மற்றயது புளொட்.

விடுதலைப் புலிகள் மற்றும் புளொட் போன்ற அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நவீன ஆயுதங்களை கொள்வனவு செய்வதை இந்திய அரசாங்கம் விரும்பவில்லை.

இந்தியா தனது தேச நலனை அடிப்படையாகக்கொண்டு டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற அமைப்புக்களைத்தான் வளர்த்து வந்தது. இந்த அமைப்பின் ஏறாளமான உறுப்பினாகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி, பலவிதமான ஆயுதங்களையும் அவற்றிற்கு வழங்கிவந்தது.

ஆனால் விடுதலைப் புலிகளின் சுமார் 200 உறுப்பினர்களுக்கு மட்டும்தான் இந்தியா இராணுவப் பயிற்சி வழங்கியிருந்தது. அதுவும் எத்தனையோ இழுத்தடிப்புகளுக்குப் பின்பு, வேண்டாவெறுப்பாகவே ஒரு தொகுதி புலி உறுப்பினர்களுக்கு இந்தியா இராணுவப் பயிற்சியை வழங்கியிருந்தது.

ஆயுத விடயத்திலும் இதே கொள்கையைத்தான் இந்தியா கடைப்பிடித்தது. ஏற்கனவே பாவித்த, நீண்டகாலப் பாவனைக்கு உதவாத ஆயுதங்கள் சிலவற்றைத்தான் இந்தியா விடுதலைப் புலிகளுக்கு வழங்கியிருந்தது. புளொட்டிற்கும் இதே நிலைதான்.

இந்த இரண்டு அமைப்புக்களும் இந்தியாவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கு தயாராக இராத காரணத்தால், இந்த இரண்டு அமைப்புக்களுமே இராணுவ ரீதியாகப் பலப்படுவதை இந்தியா விரும்பவில்லை.

எந்தவிதக் கொள்கையோ, கட்டுப்பாடோ இல்லாது, இந்தியாவின் தேசிய நலனை மாத்திரமே கொள்கையாகக்கொண்டு தம்மால் வளர்க்கப்பட்ட டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற அமைப்புக்களைத்தான் இந்தியா வளர்க்க முற்பட்டது.

நல்ல பயிற்சிகளையும், ஆயுதங்களையும் இப்படியான அமைப்புகளுக்குத்தான் இந்தியா வழங்கியும் வந்தது.

எனவே விடுதலைப் புலிகள் மற்றும் புளொட் போன்ற அமைப்புகள் தமது உறுப்பினர்களுக்கான இராணுவப்பயிற்சிகளுக்கும், ஆயுத கொள்வனவற்றிற்கும் வேறு மார்கங்களைத் தேடிக்கொள்ளத் தலைப்பட்டார்கள்.

ஆனால் அவற்றையும் இந்தியா தடுத்து வந்தது.

பறிக்கப்பட்ட ஆயுதங்கள்:

ஈழப் போரை முன்னெடுக்கவென்று ஒரு தடவை வெளிநாடொன்றில் இருந்து பெருமளவு ஆயுதங்களை புளொட் அமைப்பு கொள்வனவு செய்திருந்தது. அதாவது, ஈழத்தின் பெரும் பகுதிகளை விடுவிக்கப் போதுமான அளவு ஆயுதங்கள் அவை என்று அந்நாட்களில் கூறப்பட்டது. பலகோடி ரூபாய் பெறுமதியான ஆயுதங்கள் அடங்கிய அந்தக்கொள்கலன்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டபோது, இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் அவற்றைக் கைப்பற்றிவிட்டார்கள்.

ஈழ விடுதலைக்கென்று கொள்வனவு செய்யப்பட்ட அந்த ஆயுதங்கள் மீண்டும் ஈழ போராளிகளிடம் வழங்கப்படவேயில்லை.

இப்படியான சந்தர்ப்பத்தில்தான் விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி நவீன ஆயுதங்களை வெளிநாடொன்றில் கொள்வனவு செய்து தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்திருந்தார்கள்.

அந்நாட்களில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அத்தனை பலமாக இருக்கவில்லை. புலிகளிடம் அப்பொழுது பெரிய கப்பல்கள் இருக்கவில்லை. நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்களில் இருந்து ஆயுதக் கொள்கலன்களை இறக்கி, தமது தளங்களை நோக்கிக் கொண்டுசெல்லக்கூடிய கடற்கலன் வசதிகளும் அப்பொழுது புலிகளிடம் பெரிய அளவில் இருக்கவில்லை. அதனால் தாம் கொள்வனவுசெய்த ஆயுதங்களை சென்னைத் துறைமுகம் வழியாகவே தமிழ் நாட்டிற்குள் தருவிக்க அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஆயுதக்கடத்தலுக்கு உதவினார்:

புலிகள் கொளவனவு செய்த நவீன ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்களைச் சுமந்த வெளிநாட்டுக்கப்பல் ஒன்று சென்னைத் துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலில் இருந்த ஆயுதக் கொல்கலன்களை வெளியே எடுப்பதற்கு புலிகள் மேற்கொண்ட பலவிதமான முயற்சிகளும் கைகூடவில்லை. சென்னைத் துறைமுகப் பாதுகாப்பில் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாலும், துறைமுக அதிகாரிகள் புதிதாக மாற்றப்பட்டிருந்ததாலும், ஆயுதக் கொள்கலன்களை வெளியே எடுப்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.

இத்தனைக்கும், சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான் புளொட் அமைப்பு ஆயுதங்கள் கொண்டுவந்த ஆயுதக் கப்பல் ஒன்றை இந்திய புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியிருந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதேபோன்று தமது ஆயுதங்களும் பறிபோவதை புலிகள் விரும்பவில்லை.

புலிகளுக்கு என்னசெய்வதென்று தெரியவில்லை.

கஷ்டப்பட்டுக் கொள்வனவு செய்த ஆயுதங்கள். எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் சென்னைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. அந்த ஆயுதங்கள் தமது கைகளுக்கு கிடைக்காவிட்டால். அச்சந்தர்ப்பத்தில் போராட்டம் பாரிய பின்னடைவை சந்திக்கவேண்டி ஏற்படும் என்பது புலிகளுக்கு நன்கு தெரியும். ஆயுதங்களை வெளிக்கொனருவதற்கான எந்த முயற்சியும் பலிக்கவில்லை. என்ன செய்வது?

அப்பொழுது பல வழிகளிலும் புலிகளுக்கு உதவி செய்துகொண்டிருந்த எம்.ஜி.ஆர். அவர்களிடம் உதவி கேட்பதுதான் ஒரே வழி என்று புலிகள் முடிவு செய்தார்கள்.

புலிகளின் தலைவர் பிரபாகரனும், அரசியல் ஆலோசகர் பாலசிங்கமும் எம்.ஜி.ஆர். இடம் சென்றார்கள். நிலமையை எடுத்து விளக்கினார்கள்.

‘நீங்கள் கொடுத்த பணத்தில்தான் இந்த ஆயுதங்களை வாங்கியிருந்தோம். சென்னைத் துறைமுகத்தில், ஒரு கப்பலில், ஒரு கொள்கலனுக்குள் இந்த ஆயுதங்கள் இருக்கின்றன. நீங்கள்தான் எப்படியாவது அதனை வெளியே எடுத்துத் தரவேண்டும். நீங்கள் மனது வைத்தால் அது நிச்சயம் முடியும்’. என்று எம்.ஜி.ஆர். இடம் கேட்டார்கள்.

எந்தவித தயக்கமோ, பதட்டமோ இன்றி ‘இதுதானா பிரச்சனை? செய்துமுடித்துவிடலாம்.’ என்று சாதாரணமாகக் கூறிவிட்டு, உடனேயோ காரியத்திலும் இறங்கிவிட்டார். தொலைபேசியில் சில துறைமுக அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உரையாடினார். பின்னர் புலிகளின் தலைவர்களிடம் திpரும்பிய எம்.ஜி.ஆர். ஒரு சுங்க அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு, ‘இந்த அதிகாரியிடம் எல்லாம் கூறியிருக்கின்றேன். அவரைப் போய் சந்திpயுங்கள். அவர் அனைத்தையும் கவனித்தக்கொள்வார்’ என்று கூறினார்.

நன்றி தெரிவித்து மனநிறைவுடன் திரும்பினார்கள் புலித்தலைவர்கள்.

போலிசாரின் பாதுகாப்புடன் வந்த புலிகளின் ஆயுதங்கள்

சென்னைத் துறைமுகத்தில் இருந்து ஆயுதங்களை மீட்டுவரும் பொறுப்பை கேணல் சங்கரிடம் ஒப்படைத்தார் தலைவர் பிரபாகரன்.

ஒரு சில தினங்களுக்குப் பிறகு ஒரு நாள் இரவு தமிழ் நாட்டுக் காவல்துறையினரின் பாதுகாப்புடன், தமிழ் நாட்டு அரசிற்குச் சொந்தமான பாரம்தூக்கி பொருத்திய கனரக வாகனத்தில், புலிகளின் ஆயுதக் கொள்கலன் சென்னை மாநகரம் ஊடாகப் பவணிவந்து திருவான்மையூரில் உள்ள புலிகளுக்கச் செந்தமான ஒரு வீட்டில் கவனமாக இறக்கப்பட்டது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திலும், தலைவர் பிரபாகரனிலும் ; எம்.ஜி.ஆர். கொண்டிருந்த அன்பிற்கும், நம்பிக்கைக்குமான ஒரு சிறு வெளிப்பாடுதான் இந்த சம்பவம்.

பிரபாகரன் வழங்கிய பரிசு:

புலிகளின் அயுதங்களை மீட்டுவர உதவிய எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்க புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பினார். அத்தோடு, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஒரு பெறுமதியான ‘நினைவுப் பரிசையும்’ வழங்க அவர் விரும்பினார்.

ஒருநாள் இரவு எம்.ஜி.ஆரிடம் சென்று தனது நன்றிகளைத் தெரிவித்த புலிகளின் தலைவர், அழகாகப் பொதி செய்யப்பட்ட ஒரு பரிசினை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார்.

ஆச்சரியம் முகத்தில் தெரிய அந்தப் பரிசுப் பொதியை பிரித்த எம்.ஜி.ஆருக்கு இன்ப அதிர்ச்சி.

ஒரு புத்தம் புதிய AK-47 ரக இயந்திரத் துப்பாக்கி அந்தப் பொதியினுள் இருந்தது.

எம்.ஜி.ஆர் அவர்கள் இது போன்ற ஒரு இயந்திரத் துப்பாக்கியை நேரில் பார்த்தது அதுவே முதற் தடவை. அவர் சினிமாக்களில் நடிக்கும் போது பல தடவைகள் போலி இயந்திரத் துப்பாக்கிகளை வைத்து எதிரிகளைச் சுட்டு வீழ்த்தி இருக்கின்றார். ஆனால் உண்மையான ஒரு இயந்திரத் துப்பாக்கியை அவர் நேரில் பார்த்தது, அதுவும் தொட்டுப்பார்த்தது கிடையாது.

அவரது மெய்பாதுகாவலர்களிடமும், தமிழ் நாட்டுப் பொலிசாரிடமும் கூட, AK-47 ரகத்துப்பாக்கிகள் அந்த நேரத்தில் இருக்கவில்லை.

அக்காலகட்டத்தில் தமிழ் நாட்டுப் பொலிசார் வெறும் லத்திக் கம்புகளையும்;, கைத்துப்பாக்கிகளையும், 303 ரக சாதாரண ஒற்றைத் துப்பாக்கிகளையும்தான் வைத்திருந்தார்கள். விதிவிலக்காக சில விஷேட நடவடிக்கைகளுக்கு அவர்கள் சப் மெஷின் கண்களை பாவித்தார்கள். AK-47 ரக இயந்திரத் துப்பாக்கிகளை அவர்கள் கண்டதே கிடையாது.

எம்.ஜி.ஆர். தனது கைகளில் தவழ்ந்த AK- 47 இயந்திரத் துப்பாக்கியை ஆச்சரியத்துடன் பார்த்தபடி நின்றார். எம்.ஜி.ஆர்.இற்கு அருகில் சென்ற புலிகளின் தலைவர் பிரபாகரன், துப்பாக்கி பற்றி எம்.ஜி.ஆர்.இற்கு விளக்கத் தொடங்கினார்.

‘இந்த ரக துப்பாக்கிகள் எப்பொழுது, எங்கு கண்டுபிடிக்கபட்டது.., அதில் எத்தனை சன்னங்கள் இருக்கின்றன…, எவ்வளவு தூரத்திற்கு இந்தச் சன்னங்கள் பாய்ந்து சென்று எதிரியைத் தாக்கும்…’ என்றெல்லாம் விளக்கிய பிரபாகரன் அவர்கள், ரவைக் கூட்டைக்கழட்டி மாற்றுவது எப்படி என்றும் துப்பாக்கியை இயக்குவது எப்படி என்றும் செய்து காண்பித்தார்.

எம்.ஜி.ஆர். இற்கு எல்லையில்லா சந்தோஷம்.

அதுவும் புலிகளின் தலைவர் துப்பாக்கியை லாவகமாகக் கையாண்ட விதத்தையும், சில நொடிகளில் துப்பாக்கியைத் துண்டு துண்டாக கழட்டியதுடன், அதேவேகத்தில் பழயபடி அதனைப் பொருத்திக்காண்பித்ததும் அவரைப் பிரமிக்க வைத்தது.

‘எப்படிச் சுடுவது?’ என்று மற்றொருதடவை கேட்டுத் தெரிந்துகொண்டார்.

அவருக்கு மட்டற்ற மகிழ்சி. புலிகளின் தலைவர் பிரபாகரனின் கைகளை இறுகப் பற்றிப் பிடித்து தனது நன்றிகளை தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். ஒரு ‘அக்க்ஷன்’ கதாநாயகன். புலிகளின் தலைவர் வேறு எந்தப் பரிசை அவருக்குக் கொடுத்திருந்தாலும் அவர் இத்தனை மகிழ்ச்சி அடைந்திருக்கமாட்டார். அவரது ரசனைக்கேற்ற விதத்திலான அந்தப் பரிசு எம்.ஜி.ஆர். ஐ மிகவும் திருப்திப்படுத்தியிருந்தது. மட்டற்ற மகிழ்ச்சிப்படுத்தியிருந்தது.

மரணப்படுக்கையிலும்:

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வழங்கப்பட்ட அந்த ஞாபகப் பரிசை எம்.ஜி.ஆர். எந்த அளவிற்கு மதிpத்தார், நேசித்தார் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்வத்தைக் குறிப்பிடலாம்.

புலிகளின் தலைவர் அப்பொழுது ஈழத்தில் இருந்து போராட்டத்தை நடாத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது எம்.ஜி.ஆர். கடுமையாகச் சுகவீனமுற்று படுக்கையில் இருந்தார். எம்.ஜி.ஆர். அவர்களை சென்று சந்தித்து சுகம் விசாரிக்கும்படியாக திரு.அன்டன் பாலசிங்கத்தைப் பணித்திருந்தார் பிரபாகரன்.

படுக்கையில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்க்கச் சென்றார் திரு.அன்டன் பாலசிங்கம். புலிகளின் தலைவரைச் சுகம் விசாரித்த எம்.ஜி.ஆர். தனது தலையனைகளுக்குக் கீழே இருந்து ஒரு ஏ.கே.-47 துப்பாக்கியை எடுத்துக் காண்பித்தார். ‘இது பிரபாகரன் எனக்கு வழங்கிய நினைவுப் பரிசு’ என்று பெருமையுடன் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். மரணம் அடையும் வரைக்கும் அவரது படுக்கையில் புலிகளின் தலைவர் வழங்கிய நினைவுப் பரிசை அவர் வைத்திருந்தார் என்று அவரது அமைச்சர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இதையும் தவறாமல் படிங்க

Leave A Reply

Your email address will not be published.