‘காதல் ஜோடிகளைப் பிடித்து திருமணம் செய்துவைப்போம்!’ -இந்து முன்னணி கடும் எச்சரிக்கை

0

‘‘காதலர் தினம் கலாசார சீரழிவு… அன்றைக்கு அத்துமீறும் காதல் ஜோடிகளைப் பிடித்து, அதே இடத்தில் திருமணம் செய்துவைப்போம்’’ என்று வேலூர் இந்து முன்னணி நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

வேலூர் கோட்டை

‘பிப்ரவரி-14’ என்றாலே அனைவருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது, ‘காதலர் தினம்’ தான். மனதிற்குப் பிடித்த பெண்ணிடம் தன்னுடைய காதலை அழகாக வெளிப்படுத்தவும், காதலி மனதில் இன்னும் ஆழமாக இடம்பிடிக்கவும் கையில் ‘ரோஜா பூ’ மற்றும் பரிசுப் பொருள்களுடன் இளைஞர்கள் காதல் வசப்படுவார்கள். காதலைக் கொண்டாடும் அதே நேரத்தில், காதலுக்கான எதிர்ப்புகளும்  அதிகமாகவே சூழ்ந்திருக்கின்றன. 

காதலர் தினத்தை இந்து அமைப்புகள் ‘கலாசார சீரழிவாக’ப் பார்க்கின்றன. ஒவ்வோர் ஆண்டும், காதலர் தினத்திற்கு எதிராக போஸ்டர்களை அடித்து ஒட்டுவது, விலங்குகளுக்குத் திருமணம் செய்துவைப்பது மற்றும் காதல் ஜோடிகளைப் பிடித்து ராக்கி கயிற்றைக் கட்டவைப்பது அல்லது திருமணம் செய்துவைக்க முயல்வது போன்றவற்றின்மூலம் காதலர் தினத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந்த ஆண்டு காதலர் தினத்திற்கும் எதிர்ப்புகள் கிளம்பிவிட்டன. 

இதுபற்றி இந்து முன்னணி வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ் கூறுகையில், ‘‘காதலர் தினம் நம் கலாசாரத்தை அழிக்கிறது. காதலர் தினத்தன்று, வேலூர் கோட்டையில் காதலர் தின எதிர்ப்பு நிகழ்ச்சியை நடத்துகிறோம். அன்றைக்கு, கோட்டை மற்றும் கோயில், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் அத்துமீறி அநாகரிகமாகவும், ஆபாசமாகவும் நடந்துகொள்ளும் காதல் ஜோடிகளைப் பிடித்து, அங்கேயே தாலியை கொடுத்து திருமணம் செய்துவைக்க இந்து முன்னணி முடிவுசெய்துள்ளது. எங்களுக்கு மற்ற நாள்களைப் பற்றி கவலையில்லை. காதலர் தினத்தை கொண்டாடக் கூடாது’’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.