கிளிநொச்சி பேரணியில் குழப்பம் விளைவித்த தமிழரசு கட்சி உறுப்பினர்கள்!

0

கிளிநொச்சியில் காணாமல் போனோருக்கு நீதி கோரி இன்று நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலார்கள் மீது அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

போராட்டத்தில் குழப்பம் விளைவிக்கப்பட்டது மட்டுமல்ல, பிரதேசசபை உறுப்பினர் தாக்கப்பட்டது, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது என, கேவலமான நடவடிக்கைகளில் தமிழரசுக்கட்சியின் கடைநிலை உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து பேரணி ஆரம்பித்ததும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்வரிசையில்- போராட்டத்தை தலைமை தாங்கி செல்வார்கள் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் அதன்பின்னால் செல்வதாகவே ஏற்பாடு.

ஆனால் கிளிநொச்சி தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எந்த ஒழுங்கிற்கும் கட்டுப்படாமல் முன்வரிசைக்கு வர முண்டியடித்தனர்.

பேரணியை குழப்பாமல் பின்னுக்கு செல்லுங்கள் என ஏற்பாட்டு குழு தலைவரான பாதிரியார் மன்றாட்டமாக தமிழரசுக்கட்சி உறுப்பினர்களிடம் பலமுறை கேட்டும், அவர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவங்களை படம்பிடித்த ஊடகவியலாளர்களுடனும் அவர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

ஊடகவிலாளர்களை பார்த்து, “எமது செய்திகளை வைத்து , பிச்சையெடுத்து பிழைப்பவர்கள்தானே நீங்கள்“ என அநாகரிகமாக திட்டினார்கள்.

இதன் காரணமாக குறித்த பேரணியில் அமைதியின்மை நிலவியது. அரசியல் கலப்பில்லாமல் நடைபெறும் என அறிவித்திருந்த பேரணியில் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு ரவுடித்தனம் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.