சனியால் 12 ராசிக்காரர்களுக்கும் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன ? இதோ முழு விபரம் உள்ளே

0

ஒன்பது கிரகங்களிலும் சனி மட்டுமே ஒருவரின் ஜாதகத்தில் ஊன்றிக் கவனித்துப் பலன் சொல்லவேண்டிய கிரகம். ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய அமைப்புகள் மற்றும் பாக்கியங்களைத் தடைசெய்வதில் முன்னிலை வகிப்பவர். ரிஷப லக்னக்காரர்களுக்கு சனி பலமிழந்த நிலையில் இருக்கும்போதுகூட மிகப்பெரும் தீமைகளைச் செய்வது இல்லை”

ஒருவரது ஜாதகத்தில் சனி நல்லநிலையில் இருக்கும்போது தனது காரகத்துவங்களின் வழியாக அபரிமிதமான வருமானங்களைத் தருவார். இவரின் வலுவைப் பொறுத்து ஒருவருக்கு வருமானம் அமையும். ஜாதகத்தில் சனி வலுப்பெற்றவர்கள் கறுப்பு நிறப் பொருள்கள் மேல் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். கறுப்பு சம்பந்தப்பட்ட பொருள்களில் அவர்களுக்கு லாபம் வரும்.

கோள்சாரத்தில் வரும் அஷ்டம சனியும், ஏழரைச் சனியும் தனிமனித வாழ்க்கையில் முக்கியமானவை. அஷ்டம சனி என்பது ஒருவருக்கு சுமாராக இரண்டரை வருடம் முதல் மூன்று வருட காலங்களுக்கு நடக்கும். ஏழரைச் சனி என்பது ஏழரை வருடம் முதல் எட்டு வருடங்கள் தொடரும்.

அஷ்டம சனியின் பாதிப்பினால் வருமானம் இல்லாத நிலை, எதிலும் தோல்வி, வம்பு, வழக்கு, வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நிம்மதியற்ற தன்மை, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று பிழைத்தல் போன்றவை நடக்கும்.

ஏழரைச் சனியின் காலங்களில் ஒருவர் நல்லது எது, கெட்டது எது, நண்பர் யார், சுற்றியுள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது போன்ற அனுபவங்களைப் பெறுவார். அவரவர் வயது, வாழ்க்கை முறை, இருக்கும் இடம் போன்றவற்றைப் பொறுத்து பலன்கள் நடக்கும்.

ஏழரைச் சனி ஆரம்பிப்பதற்கு ஒரு வருடம் அல்லது சில மாதங்களுக்கு முன்பாக ஒருவரைத் தொழில் ஆரம்பிக்க வைத்து, ஆரம்பித்ததும் சிக்கல்களை உண்டாக்கி பணத்தை இழக்க வைத்துவிடும். புலி வாலைப் பிடித்த கதையாகத் தொழிலை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் சிக்கலான அனுபவங்களைத் தருவார்.

நடுப்பகுதியான ஜன்மச் சனி எனப்படும் சொந்த ராசியில் அமரும்போது கடுமையான மன உளைச்சல்களைத் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். அதிலும் ஜன்ம நட்சத்திரத்தில் செல்லும்போது எதிர்மறையான வழிகளில் வாழ்க்கையின் இன்னொருப் பக்கத்தை புரிய வைப்பார். சுயநட்சத்திரத்தில் செல்லும் சனியால் வாய்விட்டு அழக்கூடிய சம்பவங்கள் நடக்கும்.

இனி தனித்தனியாக 12 லக்னக்காரர்களுக்கும் என்ன பலன்களைச் செய்வார் என்று பார்ப்போம்.

மேஷம்
மேஷ லக்னக்காரர்களுக்கு சனி ஏழாமிடத்தில் உச்சம் பெற்றும், பத்து, பதினொன்றாமிடங்களில் ஆட்சி பெற்றும் யோகம் தரும் நிலையை அடைவார். ஏழாமிடத்தில் உச்சம் பெறுவது சில நிலைகளில் தாமதத் திருமணம் எனும் அமைப்பைக் கொடுக்கும். பத்து மற்றும் பதினொன் றாமிடங்களில் ஆட்சியாக இருக்கும் நிலையில் நல்லவிதமான வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்
ரிஷப லக்னக்காரர்களுக்கு சனி யோகாதிபதி என்பதால் அவர் ஒன்பது, பத்தாமிடங்களில் ஆட்சி பெற்று இருக்கும் நிலையிலும், ஆறாமிடத் தில் உச்சம் பெற்று இருக்கும் நிலையிலும் அவரது தசை வரும்போது நற்பலன்களைச் செய்வார். ரிஷப லக்னக்காரர்களுக்கு சனி பலமிழந்த நிலையில் இருக்கும்போதுகூட மிகப்பெரும் தீமைகளைச் செய்வது இல்லை.

மிதுனம்
மிதுன லக்னக்காரர்களுக்கு சனி ஐந்தில் உச்சம் பெற்றும் எட்டு, ஒன்பதாமிடங்களில் ஆட்சி பெற்றும் யோகம் தரும் நிலையைப் பெறுவார். இதில் எட்டைத் தவிர ஐந்து, ஒன்பதாம் இடங்களில் அவர் இருக்கும் நிலையில் அவரது தசை நல்ல பலன்களைத் தரும். எட்டாமிடத்தில் அவர் சுபத்துவம் பெற்று இருக்கும் நிலையில் ஜாதகரை வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற இடங்களுக்கு அனுப்பி யோகத்தைத் தருவார்.

கடகம்
கடக லக்னக்காரர்களுக்கு சனி யோக நிலைகளைத் தருவதற்கு விதிக்கப்பட்ட கிரகம் அல்ல. சனி இந்த லக்னத்துக்கு ஏழு, எட்டாமிடங்களில் ஆட்சியும், நான்காம் இடத்தில் உச்சமும் பெறுவார். ஏழில் ஆட்சி பெறும் நிலையில் நல்ல மனைவியையும் நல்ல திருமண வாழ்க்கையையும் கொடுப்பார். எட்டாமிடத்தில் வலுப்பெற்று அமர்ந்திருக்கும் நிலைகளில் ஜாதகருக்கு வெளிநாட்டு யோகம் கிடைக்கும். நான்காம் இடத்தில் உச்சம் பெற்றிருக்கும் நிலையில் ஜாதகர் தீர்க்காயுளுடன் இருப்பார்.

சிம்மம்
சிம்ம லக்னக்காரர்களுக்கு சனி நல்ல பலன்களை தருவதற்கு இயலாதவர் ஆவார். இந்த லக்னத்துக்கு ஆறு மற்றும் ஏழாம் இடங்களில் ஆட்சியும், மூன்றாம் இடத்தில் உச்சமும் பெறுவார். ஆறாமிடத்தில் சனி ஆட்சி பெறுவது யோகத்தைத் தராது. சனி சுபத்துவம் பெறாமல் இருக்கும் நிலையில் தன்னுடைய தசையில் கடன், நோய், எதிர்ப்பு போன்ற பலன்களைத் தருவார். ஏழாமிடத்தில் ஆட்சி பெற்றால் நல்ல மனைவி, குடும்ப வாழ்க்கை என அமைத்துத் தருவார். மூன்றாம் இடத்தில் உச்சம் பெற்றிருக்கும் நிலையில் சில நல்ல பலன்களைச் செய்வார்.

கன்னி
கன்னி லக்னக்காரர்களுக்கு ஐந்து, ஆறாமிடங்களில் ஆட்சி பெற்றும், இரண்டாம் வீட்டில் உச்சம் பெற்றும் சனி யோகத்தைத் தருவார். இரண்டில் சனி இருக்கும்போது தாமதத் திருமணத்தையும், குழப்பமான மண வாழ்க்கையையும் தருவார். ஐந்தில் அவர் ஆட்சி பெற்று இருப்பது நன்மைகளைத் தரும். ஆறில் இருப்பது சரியான நிலை அல்ல. இவர்களுக்கு யோகாதிபதி என்பதால் பெரிய அளவில் கெடுதல்களைச் செய்வதில்லை.

துலாம்
துலாம் லக்னக்காரர்களுக்கு இவர் ராஜயோகாதிபதி நிலைபெற்று நான்கு, ஐந்தாம் இடங்களில் ஆட்சியும், லக்னத்திலேயே உச்சமும் பெறுவார். சனி மோசமான நிலையில் இருந்தாலும் மிகப்பெரிய துன்பங்களை துலாம் ராசியினருக்குத் தருவதில்லை. லக்னத்தில் சுபத்துவம் பெற்றிருக்கும் நிலையில் தனது தசையில் பெரிய யோகங்களையும், நான்கு, ஐந்தாமிடங்களில் ஆட்சியாக இருந்து குரு பார்வை பெறும் நிலையில் ஜாதகரை உயரிய நிலைக்கும் கொண்டு செல்வார்.

விருச்சிகம்
விருச்சிக லக்னக்காரர்களுக்கு 3, 4 இடங்களில் ஆட்சி பெற்றும், பன்னிரண்டாம் இடத்தில் உச்சம் பெற்றும் யோகம் தருவார். இதில் அவர் மூன்று, நான்காமிடத்தில் ஆட்சி பெறுவது நல்ல நிலை. பன்னிரண்டில் உச்சமாக இருக்கும்போது வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற இடங்களுக்கு அனுப்பி பொருள் தேட வைப்பார்.

தனுசு
தனுசு லக்னகாரர்களுக்கு இரண்டு, மூன்றாமிடங்களில் ஆட்சியும் பதினொன்றாம் இடத்தில் உச்சமும் பெற்று யோகத்தைத் தருவார். பதினொன்றில் அவர் உச்சமாக இருப்பது நல்ல பலன்களைத் தரும். இரண்டு, மூன்றாமிடங்களில் அவர் கெடுதல்கள் செய்வதில்லை. இரண்டாம் வீட்டில் இருக்கும் நிலையில் தொழில் நிலைகளில் நல்ல பலன்களைத் தருவார்.

மகரம்
மகர லக்னக்காரர்களுக்கு சனி லக்னாதிபதி என்பதால் லக்னம் மற்றும் இரண்டாமிடங்களில் ஆட்சியும், பத்தில் உச்சமும் பெற்று யோகத்தை தருவார். ஒன்று, பத்தில் அவர் இருப்பது நல்ல பலன்களைத் தரும். இரண்டில் இருப்பது சில நிலைகளில் தாமதத் திருமணத்தை ஏற்படுத்தலாம். சனியே லக்னாதிபதி என்பதால் மோசமான நிலையில் இருந்தாலும் கெடுபலன்களைத் தரமாட்டார்.

கும்பம்
கும்ப லக்னக்காரர்களுக்கு சனியே அதிபதி என்பதால், 1, 12 -ம் இடங்களில் ஆட்சியும், ஒன்பதாம் இடத்தில் உச்சமும் பெற்று நல்ல பலன்களைத் தருவார். ஒன்பதில் உச்சமாக இருக்கும் நிலையில் சனி தசையில் நல்ல பலன்கள் ஏற்படும். 12 – ம் இடத்தில் ஆட்சியாக இருக்கும்போது வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற இடங்களுக்கு அனுப்பி லாபங்கள் தருவார். லக்னத்தில் அவர் இருக்கும்போது சுப கிரகத் தொடர்புகள் இருந்தால் நன்மைகளும், பாப கிரகத் தொடர்புகள் இருந்தால் தீமைகளும் இருக்கும்.

மீனம்
மீன லக்னக்காரர்களுக்கு சனி 11, 12 – ம் இடங்களில் ஆட்சியும், எட்டாம் இடத்தில் உச்சமும் பெறுவார். மீனத்துக்கு அவர் எட்டில் உச்சம் பெறுவது நல்லதல்ல. எட்டில் சனி இருப்பதால் தாமதமான வாழ்க்கைத்துணை அமையும். பதினொன்றில் அவர் இருப்பது சிறப்பான நிலை. இங்கிருக்கும் சனி தொழில் விஷயங்களில் லாபங்களைத் தருவார். பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும் சனி ஜாதகரை தொலைதூர இடங்களுக்கு அனுப்பி பொருள் தேட வைப்பார்” என்று விரிவாகக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.