ஜெயமோகன் பெண்ணாக இருக்க வேண்டும்! தாக்கும் ஈழக் கவிஞர்

0

தமிழக செய்தியாளர். சென்னை.

அரசியலில் ஹெச். ராஜா, தமிழிசை போல இலக்கியத்தில் சர்ச்சைகளின் நகைச்சுவை நாயகன் ஜெயமோகன். சினிமா நடிக்கைகள் போல அவ்வப்போது சர்ச்சைகளிலும் கிசுகிசுக்களிலும் தானாகவே சிக்கிக்கொள்வார். ஈழம் குறித்து எப்போதும் எதையாவது சொல்லி ஈழ மக்களிடமும் ஈழ ஆதரவாளர்களிடமும் நன்றாக வாங்கிக் கொள்வதும் வழக்கமான ஒன்றுதான். இம்முறை ஈழக் கவிஞர்களால் பெண்களின் கற்புக்கு ஆபத்து என்றும் அவர்களுக்கு பூச்சி மருத்து கொடுத்து அழிக்க வேண்டும் என்றும் ஈழக் கவிஞர்கள் எழுத்தாளர்கள் தரமற்றவர்கள் என்றும் கூறி கடும் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையை சேர்ந்த
Riyas Qurana என்ற கவிஞர் முகநூலில் எழுதியுள்ள பதிவு.ஜெயமோகனைத் தாக்கியுள்ள ”வினோதமான வியாதி”
00000000

ஜெயமோகன் எழுதுவதை நான் பொருட்படுத்துவதே இல்லை. மிக நீண்டகாலமாக இதையே கடைப்பிடிக்கிறேன். இப்படிச் சொல்வதால் அவர் முட்டாள்தனமான எழுத்தாளர் என்பது பொருளல்ல. உண்மையில் அப்படித்தான் இருந்தாலும், நான் அவரையும் எழுத்தாளராகவே கருதுகிறேன்.

சமூகம் பன்மைத்தன்மையானது என்பதை ஏற்கும் எவரும் இப்படித்தான் சிந்திப்பர். ஒரு சமூகத்தில் பல கருத்துநிலைகொண்டவர்கள், பல ரசனை நிலைகளைக்கொண்டவர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவருக்குமான உற்பத்தி அந்த சமூகத்தில் நிகழ வேண்டும். அதை ஏற்பதுதான் அடிப்படையான விசயம்.

ஆனால், தேர்வுகள் என்பது ஒவ்வொரு எழுத்தாளருக்கும், இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கும் வேறுபடலாம். வேறுபடவும் வேண்டும். பன்மைத்துவமான சமூகத்தில் அப்படித்தான் இருக்கும்.

ஆனால், ஜெயமோகனுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதி வினோதமானது. அது இன்னும் சிலருக்கும் தொற்றியிருக்கிறது. இந்த வியாதிக்கு கிருமிநாசினி கூட போதுமானதல்ல என்று சொல்ல விரும்பினாலும், அதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்.

இலக்கியவாதிகள் அல்லது எழுத்தாளர்கள் குறித்து ஜெயமோகனுக்கு இந்த வியாதி, எந்த தாக்கங்களையும் செய்யவில்லை. கவிஞர்களை குறித்து மட்டுமே அதிக உளைச்சலைக் கொடுத்திருக்கிறது.

கவிதை வளரக் கூடிய மனநிலை இலங்கையிலுள்ள இலக்கியவாதிகளுக்கு வாய்த்திருக்கிறது. மிகவும் செழித்து வளருகிறது. இந்தியாவைப் பொறுத்தளவில், கவிஞர்களும், கவிதைகளும் உருவாகும் அளவில் மனநிலைகள் பதப்பட்டிருக்கவில்லை. மனம் என்ற நிலம் இந்தியாவில் உப்படித்து விளைச்சலுக்கு போதுமான பண்பட்டதாக இல்லை. அதனால் அங்கு கவிஞர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

உண்மையில் இந்தியாவில் கவிஞர்களுக்கான பஞ்சம் அண்மைக்காலங்களில் கடுமையான வறுமையைத் தோற்றுவித்திருக்கிறது.

இலங்கையில் கவிஞர்களுக்கான பஞ்சம் இல்லை. நிறைவான உற்பத்தி இருக்கிறது. எனவே, ஜெயமோகன் போன்ற வியாதிக்காரர்கள் விரும்பினால், இந்தியாவின் கவிஞர்களுக்கான பஞ்சத்தை போக்க, நிவாரணமாக இலங்கையிலிருந்து கவிஞர்களை அனுப்பிவைக்க முடியும். அவர்கள் நிச்சயமாக ஜெயமோகனுக்கு பிடித்திருக்கும் வியாதியை குணப்படுத்த வல்லமையுள்ளவர்கள்.

இது ஒரு விசித்திரமான நோய், நோயாளி தனக்கு பிடித்திருக்கும் வியாதியை அறியார். நாம் சொன்னாலும் ஒத்துக்கொள்ளார். இருந்தாலும் என்ன செய்வது, தட்டுக் குத்தியில் போட்டாவது அவருக்கு வைத்தியம் செய்தே ஆகவேண்டும். அங்கிருக்கும் இலக்கியவாதிகள் இது குறித்து யோசியுங்கள்.

இந்த வியாதி மூளையின் எஞ்சியிருக்கும் பகுதிகளையும் தாக்குவதற்கு முன்பு, ஈழத்து கவிதைக் கசாயம், ஈழத்து கவிதை அரப்பு போன்றவைகளைக் கொண்டு அவருக்கு வைத்தியம் செய்ய வேண்டும்.

எந்த மொழியிலும், எந்தச் சமூகத்திலும் ஒரே தன்மைகொண்ட பிரதிகள் மாத்திரமே கவிதையாகப் பயிலப்படுவதில்லை. அதுபோல, யாரையும் கவிதை எழுதக் கூடாது என தடுப்பதும் கூடாது. இது மிக மோசமான வன்முறை சார்ந்த விசயம். கொடூரமான மனநிலை கொண்டவர்களேதான் இப்படி அழித்தொழிக்க பரிந்துரைப்பார்கள்.

இலக்கிய அடிப்படைவாதிகள் பலர் உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் கொலை செய்வதைக் கூட பரிந்துரைக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

ஜெயமோகன் சொன்னதைப்போல, மிக இலகுவாக அனைவராலும் கூறமுடியும். இலங்கையில் கவிஞர்கள் அதிகம். இந்தியாவில் முட்டாள்கள் அதிகம் என்று. ஆனால், இப்படிக் கூறினால் அவரைப்போலவே அமைந்துவிடும். எனவே, ஜெயமோகனுக்கு அவசரமாக வைத்தியம் செய்ய வேண்டும். இன்னும் குணப்படுத்தக்கூடிய எல்லையில்தான் அவரிருக்கிறார் என நம்புகிறேன்.

பெண்களின் கற்பைப் பற்றி அதிகம் அக்கறை கொண்டிருக்கிறார். அவரை பரிசோதிக்க வேண்டும். அவர் அதிகபட்சம் பெண்ணாகவே இருப்பார் என கருதுகிறேன். அதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள தைரியமில்லாமை கூட இப்படி சொல்லுவாதற்கு காரணமாக இருக்கலாம்.

அந்தத் துணிச்சல் அவருக்குள் பிறந்தால் கூட ஒருவகையில் இந்த வினோதமான வியாதி பாதி குறைந்துவிடும்.

Leave A Reply

Your email address will not be published.