தமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்!

0

இத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும் நினைப்பதும் பலருக்கும் அதிசயமாகவே இருக்கும். ஈழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் என்ற இன அழிப்புப் பேரழிவை சந்தித்தவர்கள். இந்த உயிரை விட்டால் போதும் என்று விரக்தி கொள்ளும் அளவுக்கு இன அழிப்புப் போரின் கொடூரம் உக்கிரமாய் இருந்தது. 

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஒரு போராட்டம் நடந்தது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக யாழ்ப்பாணத்தில் மக்கள் திரண்டு போராட்டம் செய்திருந்தனர். அதில் பிள்ளைகளை சிங்களப் படைகளிடம் கையளித்து, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார் தமது உக்கிரமான குரலில் பல செய்திகளை சொல்லிச் சென்றுள்ளனர். 

அதில் பேசிய தாய் ஒருவர், தமிழீழ காலத்தில் நாங்கள் அந்த மாதிரித்தான் வாழ்ந்தோம். எங்களுடைய பிள்ளைகளின் ஆட்சியில் எங்களுக்கு ஒரு குறையும் இல்லை. மகிழ்ச்சியாக பாதுகாப்பாக வாழ்ந்தோம், எந்தச் சாமத்திலும் எந்த இடத்திற்கும் சென்று வந்தோம். இந்தக் கள்ளர்களின் ஆட்சியில்தான் நாங்கள் இப்படி துன்பப்படுகிறோம். எங்களுடைய பிள்ளைகளின் ஆட்சியில், தமிழீழ ஆட்சியில் நாங்கள் வாழ வேண்டும். அந்த ஆட்சியே எங்களுக்கு வேண்டும் என்று உணர்வும் துயரும் கலக்க பேசினார்.

எங்களுடைய தலைவர்களோ, தமிழீழம் வேண்டாம் என்று சத்தியம் செய்த பின்னரும், சிங்கள இனவாத தலைவர்கள் எதற்கெடுத்தாலும் தமிழீழம் என்று கூச்சல் இடுகின்றனர். சிங்கள அரசில்வாதிகளின் அதிகாரப் போட்டிக்கு தமிழீழம் தேவைப்படுகின்றது. எந்தவொரு தீர்வையும் முன் வைக்காமல், எடுத்ததிற்கெல்லாம் தமிழீழம் என்று சிங்கள இனவாதிகள் பேசுகையில், நாம் ஏன் தமிழீழத்தைப் பற்றி பேசக்கூடாது? 

தற்போது ஈழத்தில் பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுகின்ற காலம். விளையாட்டுப் போட்டிகளில் இல்லம் அமைக்கும்போது, தமிழீழ நாட்டை இல்லமாக பிள்ளைகள் அமைக்கிறார்கள். விடுதலைப் புலிகள் காலத்தில் குழந்தையாக இருந்தவர்கள், அதைப் பற்றி அறியாதவர்கள்கூட தமிழீழத்தையும் புலிகளையும் வலியுறுத்தும் இல்லங்களை அமைத்து தமிழீழத்தை நினைவுகூறுகின்றனர். 

சிங்களப் பேரினவாதிகளின கையில் சிக்கியுள்ள தமிழீழம் பெரும் அவதிக்கு உள்ளாகின்றது. அண்மையில் யாழில் ஒரு நிகழ்வில் சுமந்திரன் எம்பி, விடுதலைப் புலிகள் காலத்தில் நடக்காத குடியேற்றங்கள் உள்ளிட்ட கொடுமைகள் தற்போது நடக்கிறது, அதை தங்களால் தடுக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். உண்மையில் அன்றைக்கு தமிழீழத்தில் ஒரு அங்குல நிலம்கூட பறிபோகவில்லை. ஒரு புத்தர்சிலைகூட வைக்கப்படவில்லை. தமிழீழம் பாதுகாக்கப்பட்டது. 

ஆனால் இன்றுஈ சடட ரீதியாக ஒரு புறம் தமிழீழம் தாய் நிலத்தை இழக்கிறது. சட்ட ரீதியாக தமிழர்கள் அழிக்கப்படுகின்றனர். அத்துடன் சட்டத்திற்கு விரோதமாக தமிழீழ நிலம் பறிக்கப்படுகின்றது. தமிழ் இனம் அழிக்கப்படுகின்றது. இத்தனைக்குப் பிறகும், தமிழ் ஈழ நிலத்தை பிடிக்க வேண்டும். சைவ ஆலயங்களின் அருகே புத்தனை குடியேற்ற வேண்டும் என்று சிங்களவன் நினைத்தால் ஈழக் குழந்தைகள் தமிழீழக் கனவைத்தான் காண்பார்கள். ஈழத் தாய்மார்கள் தமிழீழத்தைதான் கேட்பார்கள்.

பச்சைக் குழந்தை முதல், தாய்மார்கள் வரை தமிழீழத்தை கேட்கத் துவங்கிவிட்டனர் என்றால் அக் கனவு மீண்டும் கனல்கிறது என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். இலங்கை – ஈழ இனப்பிரச்சினையின் பரிமாணமும் தீர்வும் இயல்பும் முடிவும் அதுதான்.

அடுத்த தலைமுறை எம்டைவிடவும் உக்கிரமாய் போராடும் என்று தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியிருந்தார். அவரது வார்த்தைகளை ஈழத் தலைமறைகள் மெய்பிக்கின்றன. சிங்கள இனவாதப் பேரினத்தால், சிறுபான்மையரான ஈழத் தமிழர்களை எதனாலும் அழித்துவிட முடியாது. அவர்களின் தமிழீழக் கனவை எதனாலும் ஒழித்துவிட முடியாது. தமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும். அப்போதுதான் எமது இனத்தின் கண்ணீர் நிரந்தரமாய் துடைக்கப்படும். 

ஆசிரியர், ஈழம்நியூஸ்.10.02.2019Leave A Reply

Your email address will not be published.