`தினகரன் ஒரு நல்ல மக்கள் தலைவர்!’ – நடிகர் ரஞ்சித் நெகிழ்ச்சி

0

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க-வுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் சமூக வலைதளங்களில் இந்தக் கூட்டணி குறித்து பல்வேறு விமர்சனங்களை பா.ம.க சந்தித்து வருகிறது.

கூட்டணி

நேற்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்தக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நடிகர் ரஞ்சித், `பா.ம.க கட்சியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தார். இன்று புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க-வில் இணைந்தார் ரஞ்சித்.  

தினகரனுக்கு வாழ்த்துக்கூறிய ரஞ்சித்

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சித், “மாற்றம் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டு தமிழக மக்களை சிலர் ஏமாற்றி வருகின்றனர். தற்போது அவர்கள் தன்மானத்தைவிட்டு கூட்டணிக்காக விலை போய்விட்டனர். அதனால்தான் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி அ.ம.மு.க-வில் இணைந்திருக்கிறேன். என்னைத் தொடர்ந்து நிறைய பேர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறுவார்கள். தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே அ.ம.மு.க-வில் இணைந்து எனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். டி.டி.வி.தினகரன் ஒரு நல்ல மக்கள் தலைவராக வலம் வருகிறார். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காகத் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இருக்கிறேன்” என்றார்.  

தினகரன்

அவரைத் தொடர்ந்து பேசிய டி.டி.வி.தினகரன், “நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியை எஸ்.டி.பி.ஐ கட்சிக்காக ஒதுக்கியிருக்கிறோம். பல்வேறு கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். அவர்களுடன் உடன்பாடு ஏற்பட்டால் அவர்களுக்கு தொகுதி ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்படும். அப்படி இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவோம். சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க மற்றும் தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம். எடப்பாடி பழனிசாமியின் கட்சித் தலைமை டெல்லியில் இருக்கிறது என்று  பலமுறை நான் கூறி வந்திருக்கிறேன். அதை மெய்ப்பிக்கும் விதமாக அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் மோடியின் படத்தைத் திறந்திருக்கிறார்கள். அந்த வகையில் அ.தி.மு.க-வின்  தற்போதைய பொதுச் செயலாளர் நரேந்திர மோடிதான் என்பது தெரிய வந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.   

Leave A Reply

Your email address will not be published.