தென்னிலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை: முப்படையும் உசார் நிலையில்;

0

இலங்கையின் தென் அரைப் பாகத்தில் கடுமையான மழைவிழ்ச்சி பதிவாகும் என்பதால் பொதுமக்கள் உடனடியாக தகுந்த பாதுகாப்பினைத் தேடுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய நாளுக்காக வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே திணைக்களம் இந்த விடயத்தினைக் குறிபிட்டுள்ளது.

இதன்படி இரத்தினபுரி, கழுத்துறை, மாத்தறை, நுவரெலியா, காலி மாவடங்களில் கடும் மழை பொழியும் என்றும், இது 150mm வரை உயர்வாகக் காணப்படும் என கூறப்பட்டுள்ளதுடன் ஊவா மாகாணம் மற்றும் கேகாலை, கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை ஆகிய மாவடங்களில் 100மில்லிமீட்டர்வரை உயர்வாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென், மேல் மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் பலத்த மின்னல் தாக்கத்திற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்ட மக்களுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவுறுத்தல்கள் சிலவற்றை விடுத்துள்ளது.

அதன்படி,

  • மரங்களில் கீழ் நிற்காது பாதுகாப்பான இடங்களை அவசரமாக தேடவும்
  • இடிமின்னல் தாக்கம் அதிகமாக காணபடும் என்பதனால் திறந்தவெளிகளான வயல் நிலங்கள், தேயிலைத்தோட்டங்கள், பரந்த நீர்நிலைகள் என்பவற்றில் நிற்கவேண்டாம்.
  • மின்னல் மின்னுகின்றபோது தொலைபேசி மற்றும் இலத்திரனியல் பொருட்களை மின்னிணைப்பில் வைத்திருக்கவேண்டாம்.
  • திறந்தவெளிப் பயணங்களை மேற்கொள்ளவேண்டாம். குறிப்பாக வாகனங்கள், மிதிவண்டிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்றவற்றில் பயணிக்கும்போது மின்னல் தாக்கக்கூடும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும்.
  • மரங்கள் முறிந்துவிழக்கூடிய பகுதிகளிலுள்ள மின்சாரக் கம்பங்களுக்கு அருகில் நிற்கவேண்டாம்.
  • அவசர நிலைமையின்போது உங்கள் பிரதேச அனர்த்த முகாமைப்பிரிவுக்கு பொறுப்பானவர்களை அழைக்கவும்.

Leave A Reply

Your email address will not be published.